தமிழில் 'நேரம்' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'ராஜா ராணி' படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை தொட்டவர் நஸ்ரியா. அதன்பின், சில மலையாள படங்களிலும், தனுஷின் 'நையாண்டி', ஜெய்யின் 'திருமணம் எனும் நிக்காஹ்' ஆகிய படங்களிலும் நடித்த அவர், திடீரென மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். 

பின்னர், நடிப்புக்கு முழுக்குப்போட்ட அவர், முழுநேர குடும்பத் தலைவியாகவே மாறிப்போனார். திருமணமானாலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே இன்றைய நிலையிலும் திகழ்ந்து வரும் நஸ்ரியா, மலையாளத்தில் 'கூடே' படத்தின் மூலம் மீண்டும் 2-வது இன்னிங்சை தொடங்கினார். 

இதைத் தொடர்ந்து, அவர் நடிக்கும் புதிய படம் 'ட்ரான்ஸ்'. அன்வர் ரஷீத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், நஸ்ரியாவுக்கு ஜோடியாக அவரது கணவர் பஹத் பாசில் நடித்துள்ளார். 

ரியல் லைஃபில் கணவன் மனைவியான இருவரும், ரீல் லைஃபிலும் ஜோடியாக நடிப்பதால் 'ட்ரான்ஸ்' படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

அதில், நஸ்ரியா குட்டை பாவாடை அணிந்து வாயில் சிகரெட்டுடன் இருக்கும் கோலத்தைக் கண்டு ரசிகர்கள், 'நம்ம நஸ்ரியாவா இது?' என மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நஸ்ரியா மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளதால் விரைவில் தமிழிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அஜித்தின் 59வது படத்தில் நடிகை நஸ்ரியா நடிக்க உள்ளதாகவும் சில செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.