’பாராளுமன்றத்தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் கமல் தனித்தன்மை மிக்கவர். ஆனால் இன்னும் கட்சியே துவங்காத ரஜினி மிகவும் ஆபத்தானவர்’ என்று பேச்சாளர் நாஞ்சில் சம்பத்  கமலுக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியிருப்பதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மய்யம் கொள்ளவிரும்புகிறாரோ என்ற அய்யம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை ஒட்டி வலைதளங்களில் 'ஆண்டவா இந்த இன்னோவா நாஞ்சில் சம்பத் கிட்ட இருந்து எங்க ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவனைக் காப்பாத்து’ என்று கமல் ஆதரவாளர்கள் கதறி வருகின்றனர்.

ம.தி.மு.க.முதல் அம்மா.தி.மு.க. வரை பல ரவுண்டு கண்டு தற்போது  ‘எங்கே செல்லும் இந்தப் பாதை’ என்று திக்குத் தெரியாமல் தத்தளித்து வரும் நாஞ்சில் சம்பத் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கமலைப் புகழ்ந்து தள்ளினார்,. அவர் பேசுகையில், ‘வரும் பாராளுமன்றத்தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக கமல் அறிவித்திருப்பது அவரது தனித்துவமான தன்மையைக் காட்டுகிறது. ஆனால் அதே சமயம் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதனால்தான் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லப்போகமுடியவில்லை என்று சப்பைக்கட்டு கட்டும் ரஜினியின் சுயரூபத்தையும் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்’ என்றார்.

தனது கட்சியில் இணைந்த, மற்றும் உயர்மட்டக் குழுவில் உள்ள ஒருவருக்குக் கூட கமல் இன்னும் இன்னோவா கார் வாங்கித்தரவில்லை என்பதை நாஞ்சிலாருக்கு யாராவது உடனே சொல்லிவிடுவது நல்லது.