17 ஆண்டுகளுக்கு பிறகு தி நம்பி எஃபெக்ட் என்ற திரைப்படத்தில் மாதவன் சிம்ரன் ஜோடி மீண்டும் இணைய உள்ளனர். 

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராணயனின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் படத்தை இயக்குனர் அனந்த் மகாதேவனுடன், நடிகர் மாதவன் இணைந்து இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஆனந்த் மகாதேவன் படத்திலிருந்து வெளியேறினார். 

இதனையடுத்து முதல்முறையாக இயக்குனராகவும், நடிகராகவும் மெகா பட்ஜெட் படத்தை மாதவனே தனித்து இயக்குகிறார். சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக இப்படத்திற்காக முழுமூச்சாக பாடுபட்டுவரும் மாதவன், உலகத்திற்கு தெரியாத நம்பி நாராயணின் கதையை இந்த படத்தின் மூலம் சொல்லப்போவதாக கூறியுள்ளார்.  

நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. மேலும் அவ்வப்போது தனது தோற்றத்தை சமூக வலைதளங்களிலும் அவர் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்ரனுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும், 17 ஆண்டுகளுக்கு பிறகு திருவும், இந்திராவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவனும் சிம்ரனும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.