கொரோனா அச்சுறுத்தல், தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக எதிர் பார்த்ததை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனாவால், பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே சென்றது. 

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  இந்த நான்கு மாவட்டங்களிலும் நாளை முதல் ஜூன் 19 ஆம் தேதி முதல்,  30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளார். 

அதனால் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் அமலுக்கு வரும் இந்த முழு ஊரடங்கில், அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அதுவும் சில நிபந்தனைகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற படி, கடுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த முழு ஊரடங்கு குறித்து அவசர அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது, " சென்னை மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதனடிப்படையில் ஜூன் 19 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை சங்க அலுவலகம் செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்".