அக்டோபர் 15, 2019 அன்று தேர்தல் வழக்கிற்கான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கின்ற நேரத்தில், தாங்கள் சங்க அலுவலகம் வேலை நேரம் முடிந்து யாரும் இல்லாத நேரத்தில் அக்டோபர் 5-ம் தேதி இரவு 8:30 மணியளவில் நடிகர் சங்கத்திற்கு ஏன் தனி அலுவலர் நியமிக்கக்கூடாது என்று தன்னிலை விளக்கம் கேட்டு அலுவலக கதவில் கடிதம் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தும் கேட்டும் உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த வேதனையடைந்தோம் என்று நடிகர் சங்கம் சார்பாக தமிழக அரசின் தனி அலுவலருக்குக் காரசாரமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் சங்கம் செயல்படுவது போல் தெரியவில்லை. அங்கு ஏன் ஒரு தனி செயல் அதிகாரியை நியமிக்கக்கூடாது என்று கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பதிலாக அனுப்பப்பட்ட  அந்த நீண்ட கடிதத்தில்,...தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாகிய எங்களுக்கு தங்கள் கடிதம் மற்றும் பத்திரிகையில் வந்த செய்தி பார்த்து அதிர்ச்சியையும் வியப்பையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

இச்சங்கம் திரைப்படம் நாடகத் துறை சார்ந்த உறுப்பினர்களின் நலனுக்காகவும், வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கும் நிறுவப்பட்ட சங்கமாகும். இச்சங்கத்தில் நாங்கள் உறுப்பினர்களாக இருந்து பல நன்மைகளை இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்குக் கடந்த மூன்றரை வருடங்களாக மட்டுமே அனுபவித்து வருகிறோம். இந்நிர்வாகம் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு அரணாகவும் மிகுந்த நம்பிக்கையுடன் உறுப்பினர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் விசாரித்து நிறைவேற்றியும் தங்கள் கடமைகளைத் திறம்படத் தொடர்ந்து இந்நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது.

கடந்த மூன்றரை வருட காலமாகச் சங்க உறுப்பினர்களாகிய எங்களுக்கு முதியோர் மாதாந்திர ஓய்வூதிய தொகை, கல்வி உதவி தொகை, மருத்துவ உதவித் தொகை மற்றும் பரிந்துரை கடிதம், திருமண உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவி சங்க உறுப்பினர்களுக்கான (துணை நடிகர்கள் / நடிகையர்கள்) வேலைக்கான சம்பளம் உடனடியாக ATPS (Artistes talent promoted scheme) என்ற திட்டம் மூலம் இன்று வரை ஊதியம் பெற்று வருகிறோம். மேலும், காந்தி பென்சன் மற்றும் இயல் இசை நாடக மன்றத்தின் ஓய்வூதியத்திற்கான பரிந்துரை கடிதம் பெற்று அதன்மூலம் ஓய்வூதிய தொகை பெற்று வந்துள்ளோம்.

இந்நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகுதான் வயது அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000/- முதல் ரூ.3000/- வரை நடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக ஓய்வூதியம் கிடைக்கப்பெற்றுப் பயனடைந்து வருகிறோம். மேலும், தனிப்பட்ட முறையிலும் நிர்வாகிகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து மருத்துவச் செலவிற்காக வழங்கி வருகிறார்கள். இது போன்ற பலவித நன்மைகளை எந்தவித பாகுபாடின்றி வெளிப்படையாகப் பெற்று வருகிறோம். கலைஞர்களான எங்களின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் காரணமான இந்த நிர்வாகம் இருந்து வருகிறது.

அவ்வாறு நல்லமுறையில் நடக்கும் சங்கத்திற்குப் பலவித எதிர்ப்புகளும் சங்க வளர்ச்சியைத் தடுக்கும் விதமாகவும் பலவித முயற்சிகள் நடப்பது அனைவருக்கும் தெரிந்ததே. 2015-ம் ஆண்டு ஆண்டுக்கு முன்பு இருந்த நிர்வாகத்திற்கு ஆதரவாக உள்ளவர்கள் சங்க வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் அநாகரிகமான செயலில் ஈடுபடுவது, உறுப்பினர்களை மிரட்டுவது, தனிப்பட்ட முறையில் நலத்திட்டம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பொய் பிரச்சாரம் செய்தது. இவ்வாறு சிலர் தூண்டுதலின் பேரில் தொடர்ச்சியாகப் பல பொய்யான காரணங்கள் காட்டி பொய் புகார்களைத் தயார் செய்து தங்களிடம் கொடுத்துள்ளனர்.

சங்க வளர்ச்சிக்கு எதிராக உள்ளவர்கள் தேர்தல் முன்விரோதம் காரணமாக 2015-ம் ஆண்டு முன்பு இருந்த நிர்வாக தூண்டுதலின் பேரில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறாமல் தடுக்க பலவிதமான முயற்சிகள் எடுத்தனர். அதை காரணங்காட்டி மாவட்ட பதிவாளர் அவர்களும் தேர்தலை நிறுத்த ஆணை வெளியிட்டார் என்பது தாங்கள் அறிந்ததே.

சில உறுப்பினர்கள் தேர்தலை நிறுத்த வேண்டும், தேர்தல் வாக்குகளை எண்ணக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும், ஐசரி கணேஷ் தேர்தல் நடத்த காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டாம் என்றும் நீதியரசருக்குத் தெரிவித்ததின் அடிப்படையில் அவருக்கு நீதியரசர் அவர்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதித்ததும் தாங்கள் அறிந்ததே. தற்போது அக்டோபர் 15, 2019 அன்று தேர்தல் வழக்கிற்கான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கின்ற நேரத்தில், தாங்கள் சங்க அலுவலகம் வேலை நேரம் முடிந்து யாரும் இல்லாத நேரத்தில் அக்டோபர் 5-ம் தேதி இரவு 8:30 மணியளவில் நடிகர் சங்கத்திற்கு ஏன் தனி அலுவலர் நியமிக்கக்கூடாது என்று தன்னிலை விளக்கம் கேட்டு அலுவலக கதவில் கடிதம் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தும் கேட்டும் உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த வேதனையடைந்தோம்.

தேர்தல் முடிந்து 3 மாத காலமாகச் சங்க நடவடிக்கையில் எந்தவித தொய்வின்றி சங்க உறுப்பினர்களுக்குத் தேவையான அனைத்தும் குறிப்பாகக் கடந்த மாதம் ஓய்வூதியம், காந்தி பென்சன் விண்ணப்பம் பரிந்துரை செய்வது மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான பரிந்துரை கடிதம் உட்பட அனைத்து செயல்களிலும் நிர்வாகம் செயல்பட்டும் கொண்டு தான் இருக்கிறது. மேலும் இந்த 3 மாதத்தில் 10 உறுப்பினர்கள் இறந்துள்ளார்கள். அவர்களுக்கு விரைவாகவும் ஈமச்சடங்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 9ம் தேதி இறந்த கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தாருக்கு ஈமச்சடங்கு உதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து நடுநிலையோடும் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாகச் செயல்படும் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விதமாக தாங்கள் அனுப்பிய கடிதத்தில், நடிகர் சங்கத்திற்குத் தனி அலுவலரை ஏன் நியமிக்கக்கூடாது என்று தன்னிலை விளக்கக் கடிதத்தைக் கண்டு 80% உறுப்பினர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். தங்களின் பதவி அதிகாரம் சங்க உறுப்பினர்களாகிய எங்களின் நல்வாழ்விற்கு உதவ வேண்டுமே ஒழிய எங்களைச் சீர்குலைப்பதற்காக அல்ல....என்று அக்கடிதத்தில்  நடிகர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.