‘தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தை நல்லபடியாகக் கட்டி முடிக்கவேண்டும் என்று விரும்பினால் மீண்டும் எங்கள் பாண்டவர் அணிக்கே வாக்களியுங்கள்’ என்று சற்று பிளாக் பண்ணும் தொனியில் பேட்டியளிக்கிறார் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் விஷால்.

இன்று சற்றுமுன்னர், வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால்,”எங்கள் அணியில் ஏற்கனவே போட்டியிட்டவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் அப்படியே போட்டியிடுகிறார்கள். எங்கள் அணியைப் பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளைத் தாண்டி இன்னும் அதிகமாகவே செய்திருக்கிறோம். நிறையபேர் அணி மாற்விட்டதாக பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை.

நடிகர் சங்கக் கட்டிடத்தைப்பொறுத்தவரை இன்னும் 4 முதல் 6 மாதங்கள் நல்லபடியாக முடிக்கப்பட்டுவிடும். அது நல்லபடியாகக் கட்டிமுடிக்கப்படவேண்டுமானால் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் வேறு அணியினர் பதவிக்கு வந்தால் இந்தக் கட்டிடப்பணியை ஒழுங்காக எடுத்து செய்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. எஸ்.வி.சேகர் போன்றவர்கள் இந்த கட்டிடப்பணிக்கு எதிராக எத்தனை முறை வழக்குப்போட்டு முட்டுக்கட்டை போட்டார் என்பது ஊரறிந்த விசயம். எனவே எங்களுக்கு வாக்களிப்பதுதான் நடிகர் சங்கக் கட்டிடத்தைக் காப்பாற்ற ஒரே வழி’’என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் விஷால்.

பேட்டியின்போது வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், ஆதரவாளர்கள் என்று 25 முதல் 30 பேர் கூடியிருந்த நிலையில் என்ன காரணத்தாலோ நடிகை குஷ்புவுக்கு மட்டும் தேய்ந்த ரெகார்டுபோல் மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக்கொண்டேயிருந்தார் விஷால்.