இலங்கையில் மரணித்த பாடகி பவதாரிணி.. உடலை பெற விமான நிலையம் வந்துள்ளார் அண்ணன் கார்த்திக் ராஜா - முழு விவரம்!
Singer Bhavatharini Death : பிரபல பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி நேற்று ஜனவரி 25ம் தேதி மாலை 5 மணியளவில் காலமானார்.
தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வருபவர் தான் இளையராஜா. இவருடைய குடும்பத்தில் இருந்து பல இசைக் கலைஞர்கள் தற்பொழுது புகழின் உச்சியில் உள்ளது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக இளையராஜா அவர்களுடைய மகள் பவதாரினி, தேசிய விருது வென்ற ஒரு மிகச் சிறந்த பாடகியாக கடந்த 28 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பயணித்து வந்தார்.
1995 ஆம் ஆண்டு வெளியான ராசையா என்கின்ற திரைப்படத்தில் தோன்றிய மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் முதல், மாநாடு படத்தில் வரும் மாஷா அல்லாஹ் பாடல் வரை பல பாடல்களை பாடி மிகப் பெரிய புகழை கொண்ட ஒரு பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் நேற்று ஜனவரி 25ஆம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி இலங்கையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருடைய மறைவிற்கு பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும், தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கும், பவதாரினியின் சகோதரர்களான யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய இருவருக்கும் அனைவரும் தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இலங்கையில் இருந்து வரும் பவதாரிணி உடலை பெறுவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அவருடைய அண்ணன் கார்த்திக் ராஜா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை இளையராஜாவின் வீட்டில் பவதாரணையின் உடல் பொதுமக்களில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.