’96 படம் முழுக்க இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு ராஜா அளித்த பதில் வலைதளங்களில் பெருத்த சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

அப்பேட்டியில் சற்று கறாராகப் பேசும் ராஜா,”அதெல்லாம் மிகவும் தவறான விஷயங்கள். ஏதோ ஒரு காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் பாடல்களையே பயன்படுத்தவேண்டும் என்கிற அவசியம் இல்லை. எங்கு அவர்களால் முடியவில்லையோ, அங்கு புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தரமுடியாததுதான். யாதோன் கி பாரத் என்றொரு ஹிந்திப் படம். இசை - ஆர்.டி. பர்மன். அந்தக் கதையில் ஒரு குடும்பத்தில் 3 சகோதரர்கள் உள்ளார்கள். சிறிய வயதில் சந்தோஷமாக ஒரு பாடலைப் பாடுகிறார்கள். அவர்கள் பிரிந்து போய், எங்கெங்கோ சென்று கஷ்டப்படுகிறார்கள். இறுதிக்கட்டக் காட்சியில் அதே பாடலைப் பாடுகிறார்கள். அந்தப் பாடலின் மூலம் குடும்பம் ஒன்றாகிறது. 20 வருடங்களுக்கு முன்பு வேறொரு இசையமைப்பாளர் பயன்படுத்திய பாடலை இசையமைப்பாளர் அந்தப் படத்தில் பயன்படுத்தவில்லை. அவர் சொந்தமாக கம்போஸ் செய்தார், 20 வருடத்துக்கு முன்பு இந்தப் பாடலைத்தான் பாடினார்கள், அதை மீண்டும் இப்போது பாடுகிறார்கள் என. அதை இசையென்று சொல்வதா?!

இது தன்னுடைய பலவீனத்தைக் காண்பிக்கிறது. இது ஆண்மையில்லாத்தனமாகத் தானே உள்ளது?! ஒரு கதையில் 1980-ல் உள்ள பாடல் என்றால் 80களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலையே இசையமைக்கவேண்டும். ஏன் இசையமைக்க முடியவில்லை? ஜனங்களை என்னுடைய இசையை விட்டுப் பிரிக்கமுடியாது. அதனால் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துகிறீர்கள். அது ஆண்மையில்லாத்தனம் என்று பதில் அளித்துள்ளார்.

’96 படத்தில் தன் பாடல்களை படம் முழுக்க ஒலிக்கவிட்டதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ‘பிதாமகன்’ படத்தில் மட்டும் சிம்ரன் பாடலில் இளையராஜா பழைய பாடல்களைக் கோர்த்து ஒரு பாடல் தரவில்லையா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த மாதிரி சில்லரைத்தனமான கேள்விகளை எழுப்புவதற்குமுன் சில தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘பிதாமகன்’ வெளியான சமயத்தில் இயக்குநர் பாலா அளித்த பல பேடிகளில் அப்பாடல்கள் அத்தனையையும் கோர்த்து இளையராஜாவின் கவனத்துக்கே கொண்டு செல்லாமல் சவுண்ட் எஞ்சினியர்களை வைத்து தானே உருவாக்கியதை சொல்லியிருக்கிறார். வரலாறு முக்கியம் வலைதள வல்லுநர்களே...