’மாநாடுப் படம் குறித்துத் தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் லேட்டஸ்டாக தனது தந்தை கங்கை அமரன் வில்லன் வேடத்தில் நடிப்பதாக வரும் செய்தியும் கூட அதே வகையைச் சேர்ந்ததுதான் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படம் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே வந்தது. இப்படத்துக்காக உடல் எடையைக் குறைக்க லண்டன் சென்ற சிம்பு ஏப்ரலில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏப்ரலிலும் படம் தொடங்காத நிலையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் அடுத்த படத்தை அறிவித்தார் சிம்பு.

இச்செய்தியால் ‘மாநாடு’ டிராப் ஆகிவிட்டதாக மறுபடியும் செய்திகள் பரவின. அச்செய்திக்கு மறுப்புத் தெரிவித்து ஜூனில் படப்பிடிப்பை உறுதி செய்து இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்த நிலையில் படம் குறித்த புதிய வதந்தியாக, அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபுவின் அப்பாவும், இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது.

இச்செய்தியைக் கண்டு வெகுண்டெழுந்த வெங்கட் பிரபு ‘பாஸ் இன்னும் ஷூட்டிங் கிளம்பாத படத்தைப் பத்தி இன்னும் எத்தனை நியூஸ்தான் போடுவீங்க. அப்பா அரசியல்வாதியாவோ வில்லனாவோ படத்துல நடிக்கலை’ என்று மறுத்திருக்கிறார்.