பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படும் நிலையில், இதுவரை அவருடைய வீட்டில் இருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. இதனால் கடந்த 6 மாதமாகவே சுஷாந்த் மன உளைச்சலில் இருந்ததாக தெரியவந்துள்ளது. 


இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர், கரண் ஜோகர் உள்ளிட்ட 8 பேர் மீது, பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.  சுஷாந்தை படங்களில் இருந்து நீக்கி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். விடை தெரியாமல் தவித்து வந்த சுஷாந்தின் மரணத்தில் தற்போது அதிரடி திருப்புமுனையாக அவர் எழுதிய 5 டைரிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

பாந்தராவில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அந்த டைரிகளில் நிச்சயம் அவருடைய தற்கொலைக்கான காரணம் இடம் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பாலிவுட்டைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் அச்சத்தின் உச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.