பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரணம், பாலிவுட் மாஃபியா, போதைப்பொருள் புழக்கம் என அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வரும் கங்கனாவிற்கும், மகாராஷ்ட்ராவின் ஆளும் கட்சியான சிவசேனாவிற்கு மோதல் போக்கு வலுத்துள்ளது. அடிக்கடி சிவசேனாவை எதிர்த்து கங்கனா கருத்து பதிவிட்டு வந்ததால், அக்கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விமர்சனத்தின் உச்சமாக மும்பையை மினி பாகிஸ்தான் போல் உணர்வதாகவும், பாதுகாப்பற்ற நகரமாக நினைப்பதாகவும் அடுத்தடுத்து புகார்களை தெரிவித்தார். 

இந்த சூழலில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 'ஒய்' பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. ஆயுதம் தாங்கிய 10 கமாண்டோக்கள் 'ஷிப்ட்' அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள பாலிஹில்லில் கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிப்பறை இருந்த இடத்தில் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. படிக்கட்டு இருந்த இடத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதற்கு மும்பை மாநகராட்சியிடம் எவ்வித அனுமதியும் வாங்கவில்லையாம், அதனால் அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டினர். மேலும் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறி இன்று காலை அந்த கட்டிடத்தை இடித்தனர். இதை எதிர்த்து கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அலுவலக கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்தது. மேலும் மனு குறித்து பதிலளிக்கும் படியும் மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தை இடிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர்.