கொரோனா அச்சம்:

உலக நாடுகளை கடந்து, தற்போது இந்தியாவையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது கொரோனா என்னும் கொடிய வைரஸ். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு, கடுமையான ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தி வரும் நிலையிலும்... ஒவ்வொரு நாளும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது.

கண்டுகொள்ளாத சிலர்:

கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக, வீட்டிலேயே இருந்தாலும். இளைஞர்கள் சிலர், இதன் தீவிரம் பற்றி உணராமல் அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருப்பதை அதிகம் பார்க்கமுடிகிறது.

விழிப்புணர்வு:

இதனை சுட்டி காட்டும் விதமாக,  பிரபலங்கள் பலர் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி... வீடியோ வெளியிட்டு அதன் மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, பிரபல குணச்சித்திர நடிகரும், டப்பிங் கலைஞருமான, எம்.எஸ்.பாஸ்கர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கையெடுத்து கும்பிட்டு கேட்கும் எம்.எஸ்.பாஸ்கர்:  

இந்த வீடியோவில் அவர் கூறி உள்ளதாவது...நாம் அனைவரும் வீட்டில் இருந்தால், பெற்றோர்களுக்கு உதவியாக இருந்தால் இந்த வியாதியை ஒழித்துவிடலாம். மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்கும் நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

என்னைவிட நீங்கள் அனைவரும் வயதில் சிறியவர்களாக தான் இருப்பீர்கள் என நினைக்கின்றேன். இருப்பினும் நான் கையெடுத்துக் கும்பிட்டு உங்களை கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அரசாங்கமும் பெற்றோர்களும் சொல்வதை கேளுங்கள்.

இந்த வியாதியை ஒழிக்க உங்களாலான உதவி வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் இருந்தாலே போதும். காரணம் இல்லாமல் வெளியே வராமல் இருந்தால் நிச்சயம் இந்த வியாதியை ஒழித்துவிடலாம். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். உங்கள் தகப்பன் மாதிரி நான் சொல்கிறேன்’ என இரு கைகளையும் கூப்பி கேட்டு இவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.