அஜீத்தின் ‘பிங்க்’ படம் ரிலீஸாகவுள்ள மே 1ம் தேதியன்றே சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr. லோக்கல்’ படமும் ரிலீஸ் ஆகவிருப்பதாக  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தை அதிரவைத்துள்ளது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘Mr. லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. நயன்தாராவின் போர்ஷன் முடிந்துவிட, சிவகார்த்திகேயன் நடிப்பில் சில காட்சிகள் இன்னும் மீதமுள்ளன. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் மொத்தப் படப்பிடிப்பும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மே 1-ம் தேதி படம் ரிலீஸாகும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு நிறைய சிறுவர்கள் ரசிகர்களாக இருப்பதால், கோடை விடுமுறையை முன்னிட்டு மே 1-ம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்கிறது படக்குழு.

ஆனால் அதே தேதியில் அஜீத் பிறந்தநாளை ஒட்டி அவரது பிங்க் ரீமேக்கும் ரிலிஸாவதால்  இரு தரப்பு ரசிகர்களும்  இப்போதே செம டென்சனுக்கு ஆளாகியுள்ளனர். பொங்கலுக்கு ரிலீஸான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ பட வசூல் பஞ்சாயத்துகள் சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில் அடுத்த பஞ்சாயத்தா?