மே1ம் தேதி திரைக்கு வரவிருக்கும் சிவகார்த்திகேயன், நயன்தாரா காம்பினேஷனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் சி.கா.வையும் சேர்த்து அரைடஜன் ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள் என்றொரு இன்ப அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

தனது இரண்டாவது படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ல் முதல்பட நாயகனான ஜீவாவை கெஸ்ட் ரோலில் நடிக்கவைத்ததில் துவங்கி, இயக்குநர் ராஜேஷ் எப்போதும் தன்னுடைய படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளில், அதற்கு முன் தான் இயக்கிய படங்களின் கதாநாயகர்களை கெளரவ தோற்றத்தில் நடிக்க வைப்பது வழக்கம். ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜீவா, உதய நிதி நடித்த ஒகே ஒகேவில் ஆர்யா, ஆர்யா நடித்த விஎஸ்ஓபியில் விஷால், கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஜீவா என தன்னுடைய ட்ரேட் மார்க்காகவே இதனை பின்பற்றி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக வரப்போகும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தில்  இவரது முந்தைய பட ஹீரோக்களான கார்த்தி, ஜீவா, ஆர்யா, உதய நிதி ஸ்டாலின் மற்றும் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் கெளரவ தோற்றத்தில் வரவிருக்கிறார்கள் என்கிற தகவல் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வட்டாரங்களிலிருந்து கசிய ஆரம்பித்திருக்கிறது.

‘சிவா மனசுல சக்தி’ துவங்கி ’கடவுள்  இருக்கான் குமாரு’ வரை இதுவரை ஏழு மேட்ச்களில் ஆடியிருக்கும் இயக்குநர் ராஜெஷ் முதல் மூன்று படங்களில் வெற்றியும் அடுத்த மூன்று படங்களில் தொடர்ச்சியாக தோல்வியும் அடைந்து மதில் மேல் பூனையாக நிற்கிறார்.