’தனி ஒருவன்’ ஹிட்டுக்கு முன்பும் பின்பும் தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் என்ன இடத்தில் அடங்குகிறார் என்று புரிந்துகொள்ளமுடியாத இடத்தில் இருக்கும் ஜெயம் ரவியின் அடுத்த குழப்பம் இந்த அடங்க மறு.

1985ல் வந்திருந்தால் சூப்பர் ஹிட் அடித்திருக்கக்கூடிய ஒரு கதையை சரியாக 23 வருடங்கள் லேட்டாகத் தூசு தட்டியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் வழக்கமான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஜெயம் ரவியிடம், ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. அந்த வழக்கை விசாரிக்கும் ஜெயம் ரவி, அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதோடு, அந்த பெண் போல பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதையும், அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதையும் கண்டுபிடிக்கிறார். 

ஆனால், அவர்கள் அத்தனை பேரும் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால், அந்த வழக்கை கைவிடுமாறும் உயர் அதிகாரிகள் ஜெயம் ரவிக்கு உத்தரவு போட, ஜெயம் ரவியோ, குற்றவாளிகளை அடித்து துவைத்து கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால், ஆதாரம் எதுவும் இல்லாததால் கைதான சில நிமிடங்களில் வெளியே வரும் குற்றவாளிகள் ஜெயம் ரவியின் குடும்பத்தையே கொலை செய்துவிடுகிறார்கள். அதற்கு காவல்துறையும் உடந்தையாகிறது.

 இதனால், தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்யும் ஜெயம் ரவி, அதே போலீஸ் மூளையுடன் தனது குடும்பத்தை அழித்த அந்த நான்கு இளைஞர்களையும், அவர்களைக் காப்பாற்றிய அப்பாக்களின் கைகளாலேயே கொன்று முடிப்பேன் என்று சபதம் போட்டு வென்று முடிக்கும் கதை.
 
1985 கூட கொஞ்சம் லேட். 75லேயே எடுத்திருக்கவேண்டிய படம் என்று இந்தக் கதையைப் படித்த பிறகு உங்களுக்குத் தோன்றினால் கூட அது தப்பில்லைதான். ஜெயம் ரவி நடிப்பை விட பல சமயங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருவது அவரது மென்மையான குரல்தான். வழக்கமான சோதா நடிப்புடன் இப்படத்தில் குரலுக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் என்பது சற்றே ஆறுதலான சமாச்சாரம்.

டைட்டிலில் நாயகி ராஷி கண்ணா என்று போடுகிறார்கள். கதையில் அவர் என்னத்துக்கு வந்தார் என்னத்துக்கு போனார் என்று சரியாக சொல்பவர்களுக்கு எதாவது பொற்காசுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கலாம். அழகம் பெருமாள், முனிஷ்காந்த், சம்பத் மற்றும் நான்கு இளைஞர்கள் என்று படத்தில் நடித்தவர்கள் வாங்கிய சம்பளத்துக்கு வஞ்சகமில்லாமல் உழைத்திருக்கிறார்கள்.

 
சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் படம் முழுவதும் ஆக்‌ஷன் மூட் நிறைந்திருக்கிறது. அதிரடியான சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும் முழு படத்தையும், ஹீரோ ஜெயம் ரவியையும் எப்போதும் ஆக்ரோஷமாகவே ஒளிப்பதிவாளர் காட்டியிருக்கிறார்.  இசை சாம் சி.எஸ். இந்தப் பெயரை சமீபத்திய படங்களின் டட்டில் கார்டுகளில் அதிகம் பார்க்கமுடிகிறது, அதிகத்துக்கான காரணம் என்ன என்பது சத்தியமாக விளங்கவில்லை. இயக்குநர் கார்த்திக் தங்கவேலுவிடம் அறிமுக இயக்குநருக்கான ஒரு அறிகுறி கூட தெரியவில்லை என்பது படத்தின் ஆகப்பெரிய பலவீனம். அடுத்த படத்துலயாவது புதுசா எதையாவது ட்ரை பண்ணுங்க பாஸூ.