கடந்த சில வாரங்களாகவே சிறுபடங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் தத்தளித்து வரும் நிலையில் ஜுன் மாதம் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

தமிழ் நாட்டில் கோடை வெயில் மெல்ல தணிய ஆரம்பித்துள்ளது. பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வர பட அதிபர்கள் தயாராகி உள்ளார்கள். இந்த மாதம் மட்டும் குறைந்தது  10 படங்கள் திரைக்கு வருகின்றன.  நாளை மறுநாள்  ‘7’ என்கிற இம்மாதத்தின் முதல் படமாக ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்த நாளான  7-ந் தேதி ‘கொலைகாரன்’ படம் வெளியாகிறது.

இதில் விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது. அடுத்து வருகிற 14-ந்தேதி நயன் தாராவின் ‘ கொலையுதிர் காலம்’,டாப்சியின்  ’கேம் ஓவர்’, ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன.கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் உள்ளனர். ஐராவுக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் இன்னொரு திகில் படமாக வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது. 

அதற்கு அடுத்த வாரமான ஜுன்  21-ந்தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள ’சிந்துபாத்’, தனுசின் ’பக்கிரி’, ஜீவாவின் ’கொரில்லா’’ மற்றும் தும்பா’ ஆகிய 4 படங்கள் திரைக்கு வருகின்றன. 28-ந்தேதி ஜெயம்ரவி நடித்துள்ள ’’கோமாளி, யோகிபாபுவின் நகைச்சுவை படமான ’தர்மபிரபு’ ஆகிய படங்கள் வெளியாகின்றன.

தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே செயலிழந்து உள்ள நிலையில் ஒரே மாதத்தில் இத்தனை படங்கள் ரிலீஸாவதென்பது தயாரிப்பாரிகள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப்போட்டுக்கொள்வதற்குச் சமம் என்கிறார்கள் விநியோகஸ்தர் தரப்பு.