sonam kapoor : பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் வீட்டில் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ராஞ்சனா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த சோனம் கபூர், தற்போது கர்ப்பமாக இருப்பதனால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகை சோனம் கபூர் வீட்டில் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள சோனம் கபூரின் வீட்டில் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

நடிகை சோனம் கபூரின் மாமியார் அம்ரிதா இது தொடர்பாக டெல்லியில் உள்ள துக்ளக் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தான் கடந்த பிப்ரவரி 11-ந் தேதி தனது வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை சரிபார்த்ததாகவும், அப்போது தான் ரூ.1.14 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போனது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் டிரைவர்கள், தோட்டக்காரர், சமையல் காரர் என 25 பேரை போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது. நடிகை சோனம் கபூருக்கு குழந்தை பிறக்க உள்ள நிலையில், அவரது இல்லத்தில் இப்படி ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... Beast Vs KGF 2 : டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் KGF 2... விஜய்யின் பிடிவாதத்தால் சரிவை சந்திக்கும் பீஸ்ட்
