கேரளாவின் நெடுங்கால சூப்பர் ஸ்டார், தயாரிப்பாளர், பாடகர், விநியோகஸ்தர் என்று பல அவதாரங்கள் எடுத்து அத்தனையிலும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் மோகன்லால் மிக விரைவில் இயக்குநர் அவதாரமும் எடுக்கிறார். இத்தகவலை தனது வலைப்பதிவில் அவரே தெரிவித்துள்ளார்.

1978 ல் ‘திறனோட்டம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் மோகன்லாலுக்கு திரைக்கு வந்த முதல் படம் ஃபாசில் இயக்கிய ‘மஞ்ஞில் விரிஞ்ச பூக்கள்’.சூப்பர் ஹிட் அடித்த அந்த அறிமுகப் படம் முதல் சில தினங்களுக்கு முன் வெளியான ‘லூசிஃபர்’ படம் வரை எண்ணற்ற 100 நாள் படங்களைக் கொடுத்து தொடர்ந்து உச்ச நட்சத்திரமாகவே இருக்கிறார். இதுவரை 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ள மோகன்லாலுக்கு முதல் முறையாக இயக்குநராகும் ஆசை வந்திருக்கிறது.

முக்கியமாக குழந்தைகளுக்காக எடுக்கப்படும் அப்படம் 3டியில் உருவாகிறது. படத்தின் பெயர் ‘பாரோஸ் த கார்டியன் ஆஃப் டி’காமா’. வாஸ்கோ ட காமாவின் சுரங்கங்களில் இருந்த அளவற்ற சொத்துக்களின் காவலனாக இருந்த பாரோஸ் குறித்த கதை இது. பாரோஸாக சாட்சாத் மோகன்லாலே நடிக்கவிருக்கிறார்.

பெரும்பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு நிறைய வெளிநாட்டு நட்சத்திரங்கள் தேவைப்படுவதாகவும் அதனால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல நடிகர்களுடன் பேசி வருவதாகவும், படப்பிடிப்பு தேதியை மிக விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் மிக உற்சாகமாக தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார் மோகன்லால்.