அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இப்படத்திற்கான கதாபாத்திர தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. 

இயக்குனர்கள் பார்த்திபன், விஜய் மில்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் எச்.வினோத். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வித்தியாசமான கதையம்சத்தோடு உருவாகி இருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எச்.வினோத், அடுத்ததாக கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார். 

இப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. நேர்கொண்ட பார்வை ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து வெற்றி வாகை சூடினார் வினோத். இப்படத்தில் வினோத்தின் திறமையை பார்த்து வியந்துபோன அஜித், தனது அடுத்த படமான ‘வலிமை’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

இதனிடையே, அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான கதாபாத்திர தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவல் படி, மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மோகன்லால், ‘ஏ.கே.61’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் நடிகர் மோகன்லால், தயாரிப்பாளர் போனிகபூரை மும்பையில் சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. அதேபோல் நடிகர் அஜித்தும் மோகன்லால் நடித்த மரைக்காயர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தார். இதுதொடர்பான வீடியோ கடந்தாண்டு இப்படம் ரிலீசாகும் சமயத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.