மோகன்லால் நடிக்கும் 'த்ரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 2026-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Drishyam 3 Release Date : த்ரிஷ்யம் படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. தொடக்க விழா பாரம்பரிய விளக்கேற்றல் மற்றும் பூஜையுடன் நடைபெற்றது. இவ்விழாவில் மோகன்லாலுடன் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார், மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'த்ரிஷ்யம்' படத்தில் அவர் ஜார்ஜ்குட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் முதல் பாகம் 2013-ல் வெளியானது. 'த்ரிஷ்யம்' படம் காவல்துறை ஐ.ஜி-யின் மகன் காணாமல் போன வழக்கில் சந்தேகத்திற்கு உள்ளாகும் ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தின் போராட்டத்தை மையமாகக் கொண்டது.
த்ரிஷ்யம் 3 ரிலீஸ் தேதி
'த்ரிஷ்யம் 3' மிகவும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. த்ரிஷ்யம் படத்தின் முந்தைய பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்று, பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றியை ருசித்தது.
இந்த நிலையில் த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தனது எக்ஸ் பக்கத்தில், மோகன்லால் ஒரு சிறிய டீசர் வீடியோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார். "ஆண்டுகள் கடந்தன. கடந்த காலம் கடக்கவில்லை என குறிப்பிட்டு, இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார் மோகன்லால்.


