கமலின் பிறந்தநாள் விழாவாகத் துவங்கி, சூடான அரசியல் விழாவாக முடிந்துள்ள ‘கமல் 60’நிகழ்ச்சிதான் இப்போது தமிழகத்தின் சூடான டாபிக். அதிலும் ரஜினி, கமல் இருவருமே ‘நாளை அவசியல் ஏற்பட்டால் கூட்டணி வைத்து கூட தேர்தலை சந்திப்போம்’என்று கூறியிருப்பது அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியினரின் அடி வயிற்றைக் கலக்கியுள்ளது.

கமலும் ரஜினியும் அதை அப்படியே விட்டுவிட முடியுமா என்று யோசித்த எதிர்க்கட்சியினர் ‘சரிங்க அப்படியே கூட்டுச் சேர்ந்தாலும் முதல்வர் பதவியில யார் அமர்வதுங்குறதுக்காகவாவது அடிச்சுக்குவாங்க’என்று பேசத் துவங்கியுள்ள நிலையில் அதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக, ‘இருவரும் கூட்ட்ச் சேர்ந்தாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளர்’என்று பேட்டியளித்திருக்கிறார் நடிகையும் கமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான ஸ்ரீபிரியா.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர்,’“மக்களுக்கு அவசியம் என்றால் இது நடந்தே தீரும். கண்டிப்பாக இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு மட்டும் சேவை செய்ய வேண்டும். ‘இவருக்கு என்ன தெரியும்? அவருக்கு என்ன தெரியும்?’ என அநாவசியமான விமர்சனங்களை வைக்கக்கூடாது. அவர்களும் பிறக்கும்போதே மேடையில் பேசிக்கொண்டு பிறக்கவில்லை. எனவே, விமர்சனங்களை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்வதற்கான வாய்ப்பு இது. அப்படிச் செய்யவில்லை என்றால் நிச்சயம் இரண்டு பெரிய சக்திகள் ஒன்று சேரத்தான் செய்யும்” என்றார்.

அப்படி கமலும் ரஜினியும் ஒன்று சேரும் பட்சத்தில் முதல்வர் பதவி வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,“என்னுடைய அபிப்ராயம் கமல் முதல்வராக வேண்டும் என்பது. அதற்காகத்தான் நான் வேலை செய்வேன். ஆனாலும் யாருடன் இணைந்து வேலைசெய்ய வேண்டுமென அவர் சொல்கிறாரோ, அவர்களுடன் வேலை செய்வோம்” என்று ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றியிருக்கிறார் ஸ்ரீபிரியா.