கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவில்களை பராமரிக்கும் அளவிற்கு பள்ளி மற்றும் மருத்துவமனைகளை பராமரிப்பது அவசியம். உண்டியலில் காசு போடுகிறீர்கள் அதே போல் மருத்துவமனைகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் கட்டிடம் கட்ட நிதி உதவி செய்யுங்கள் என்று தெரிவித்தார். 

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் சோசியல் மீடியாவில் உலவி வருகின்றனர். திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஜோதிகாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கண்டனங்களும் அதிகரித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா அன்பை விதைப்போம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கே செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்தில் சிந்தனை.  நல்லோர்  சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதவர்களுக்கு, இது தெரிய வாய்ப்பில்லை என்றும், அறிஞர்கள், ஆன்மிகப், பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் ஜோதிகா சர்ச்சை பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ, இது தற்போது விவாதிக்க வேண்டிய  விஷயம் அல்ல. கொரோனா உலகளாவிய பிரச்சனையாக இருக்கும் போது  ஜோதிகா கருத்து விளம்பரத்திற்கு தான் உதவும். இந்த நேரத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்பது எங்கள் கருத்து என்று தெரிவித்துள்ளார்.