ராசியில்லாத நடிகை என்று தமிழ் சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்களால் ஓரம் கட்டப்பட்டுள்ள ‘மிக மிக அவசரம்’ பட நாயகி நடிகை பிரியங்காவை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிம்புவை வைத்து ‘மாநாடு’படத்தைத் தயாரிக்கவுள்ள சுரேஷ் காமாட்சி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘மிக மிக அவசரம்’படம் நாளை தமிழகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் பிரியங்கா பெண் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் அச்சந்திப்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூவும், விஜய் பாஸ்கரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக பிரிவியூ தியேட்டர் ஒன்றில் ‘மிக மிக அவசரம்’படத்தைப் பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூ படத்தில் பிரியங்காவின் நடிப்பைப் பார்த்து வியந்துபோய் அவரை நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி ஐந்தாறு வருடங்கள் ஆகியுள்ள தமிழ் நடிகையான பிரியங்கா ஏற்கனவே ‘வந்தா மல’,’கங்காரு’உட்பட பல படங்களில் மிகச் சிறப்பாக நடித்திருந்தாலும் இதுவரை ராசியில்லாத நடிகைகள் பட்டியலில்தான் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் ‘மிக மிக அவசரம்’படம் அவரை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும் என்று படம் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். அப்படி பாராட்டியோர் பட்டியலில் ஒரு தமிழக அமைச்சரும் தற்போது இணைந்துள்ளது பிரியங்காவுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.