’சிறு படங்களுக்கு நல்ல தியேட்டர்களோ மாலைக் காட்சிகளோ தராமல் தியேட்டர் அதிபர்கள் அப்படங்களை சாகடிக்கிறார்கள்’என்று ‘மிக மிக அவசரம்’படத்தின் தயாரிப்பாளர் தனது முகநூல் பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.

‘அமைதிப்படை 2’,’கங்காரு’படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்ட இப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. அதே நாளில் தேவையான அளவு தியேட்டர்கள் கொடுத்ததற்காக சில தியேட்டர் அதிபர்களை அழைத்து நன்றி அறிவிப்புக் கூட்டமும் நடத்தினார் அவர். படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்புப் பெற்றுள்ள நிலையில் வசூலில் அவ்வளவாக சாதிக்கவில்லை. காரணம் தியேட்டர்களில் பெரும்பாலும் காலை மற்றும் நண்பகல் காட்சிகள் மட்டுமே இப்படத்துக்குத் தரப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில்  பக்கத்தில் கொந்தளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,...பத்திரிகையாளர்களும் படம் பார்த்தவர்களும் கொண்டாடித் தீர்க்கும் ஒரு படத்திற்கு மக்கள் திரையரங்கிற்கு வரும் நேரங்களில் காட்சிகள் கிடைக்காதது என் படத்திற்கு எவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்.முதலில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இப்போ கிடைத்தும் பயனில்லை.குடும்பங்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மாலை வேளைகளில் காட்சிகள் தராமல் விட்டது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.காலைக் காட்சிகளிலும் மதிய வேளைகளிலும் மக்கள் வந்து குவிய நான் விஜய், அஜீத் படங்களா செய்திருக்கிறேன்.பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய ஒரு படம், பெண்கள் திரையரங்கிற்கு வரும் வேளையில் இருப்பதுதானே சரி..

பெண்கள் பார்க்கவேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட சிறு படங்கள் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும். பெண்கள் படும் பாடுகள்.. அவர்கள் தாங்கி சகிக்கும் பிரச்சனைகள் திரைக்கு வரவேண்டியது எவ்வளவோ உள்ளது...திரையரங்குகள் இப்படிப்பட்ட நல்ல படங்களுக்கு பாராமும் காட்டுவது சிறுபடங்களை அழித்துவிடும்.திரையரங்குகளுக்கு செலுத்தும் காசும் நட்டத்தை அதிகப்படுத்தும். எவ்வளவு செலவு பண்ணி பப்ளிசிட்டி செய்து என்ன பயன்??திரையரங்குகள் சிறுபடங்களை வாழவைப்போம் என சொன்னாலும், நட்சத்திரங்களின் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன என்ற உண்மை அனுபவிக்க அனுபவிக்க கசக்கிறது. வருத்தமளிக்கிறது.

எவ்வளவுதான் கத்திக் கத்தி போராடினாலும்... இதை ஒழுங்குபடுத்த முடியலையே என்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.ஒரு மொக்கை படத்தை எடுத்துட்டு தியேட்டர் கேட்டால் தப்பு. எல்லா பக்கமும் பரவலா மதிக்கும் ஒரு படத்திற்கு மாலை வேளைகள் தராமல் கருணையற்ற கொலை செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?"ஒத்த செருப்பு", மிகமிக அவசரம் போன்ற படங்களுக்கு இதுதான் நிலையா??ஒரு சில திரையரங்க நண்பர்களுக்காக இந்த உண்மையை வெளியில் பேசாமல் இருக்க முடியவில்லை.மாலை வேளைகளில் டிக்கெட் கேட்டு இல்லாமல் வேறு படங்களுக்கு செல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு அமைதியாக இருக்க முடியவில்லை.

சிறுபடங்கள் மரியாதை பெறும்போது மட்டுமே சினிமாவின் மரியாதை மேலும் உயரும்.ஆனால்... சாபக்கேடாக அது திரையரங்க வாசலிலேயே தற்கொலை பண்ணிக் கொள்கிறது. இன்னும் எத்தனை படங்களை இப்படி தற்கொலை செய்துகொள்ளக் கொடுப்போமோ தெரியவில்லை.இன்னும் முட்டி மோதி திண்டாடும் ஒவ்வொரு சிறு படத் தயாரிப்பாளர்களின் குரலாக முதல் குரல் என் குரல் என்றிருக்கட்டும்...என்று பதிவிட்டிருக்கிறார் அவர்.