கோலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக் 'மீடூ' விவகாரம் தான். ஹாலிவுட் லெவல் பிரபலங்கள்.. மீடூ பற்றி பேசி முடித்து ஓய்ந்து போய் இருந்த நேரத்தில், தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து தனக்கு வெளிநாட்டில் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என ஒரு திரியை கிள்ளி போட்டார் பாடகி சின்மயி. 

அவரை தொடர்ந்து பல முகம் தெரியாத பெண்கள், மற்றும் இளம் பாடகிகள் கூட தங்களுடைய பெயரை வெளியிடாமல் வைரமுத்து மீது குற்றம் சாட்டினார். பின் லீலா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீதும், தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி... நடிகர் ஜான் விஜய் மற்றும் கடம் வித்வான் மீதும் குற்றம் சாட்டி இருந்தார். 

இவர்களை தொடர்ந்து பிரபல நடிகர் அர்ஜுன் மீது, இவருடன்  'நிபுணன்' படத்தில் இணைந்து நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சாட்டினார்.  படப்பிடிப்பில் தன்னுடைய முதுகு மற்றும் பின்னழகை தடவியதோடு... இரட்டை அர்த்தங்கள் பேசி தன்னை விருந்துக்கு அழைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நடிகை ஸ்ருதியின் புகாரை மறுத்த நடிகர் அர்ஜுன். தன்னை  மிரட்டி பணம் பறிக்க முயற்சித்ததாக பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது  வழக்கு பதிவு செய்தார்.  

மேலும் நடிகை ஸ்ருதியுடன் வேறு சிலரும் சேர்ந்து தனக்கு எதிராக மிகப்பெரிய சதி செய்துள்ளதாகவும் கூறி சில ஆவணங்களையும் அர்ஜூன் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மேலும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு தன்னை பற்றி அவதூறு பரப்பப்பட்டதாகவும், இதற்கும் நடிகை ஸ்ருதிக்கும் தொடர்பு இருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. 

இதனை தொடர்ந்து நடிகர் அர்ஜூனின் புகார் பெங்களூர் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. உடனடியாக நடிகை ஸ்ருதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அர்ஜூனுக்கு எதிராக குற்றச்சதி செய்தல், மிரட்டுதல், ஏமாற்றுதல் என பல பிரிவுகளில் ஸ்ருதி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதி அர்ஜுன் மீது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உள்ளிட்ட புகார்களை கொடுத்துள்ளனர். அதன் படி தற்போது பெங்களூர் போலீசார் 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.