ஐயப்ப தரிசனத்துக்காக வில்லன் நடிகர் நம்பியார் சாமியின் தலைமையில் விரதம் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி அந்த சமயத்தில் தொடர்ச்சியாக 42 நாட்கள் சிகரட் புகைக்காமல் இருந்த ரகசியத்தைப் பிரபல பாடகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

நடித்தது வில்லன் வேடங்கள் என்றாலும் ரசிகர்கள் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்டவர் நடிகர் நம்பியார். சபரிமலையின் தீவிர பக்தரான  அவருக்கு இன்று  100வது பிறந்தநாள். இந்த நாளில், அவருடன் பல ஆண்டுகள் சபரிமலைக்குச் சென்ற பிரபல பாடகர் வீரமணி ராஜூ, நம்பியார் தொடர்பான சில நிகழ்வுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

''நம்பியார் குருசாமியுடன், பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள், விநியோகஸ்தர்கள்னு எல்லாருமே கலந்து சபரிமலைக்கு வருவாங்க. சிவாஜி சார், அமிதாப், ரஜினி சார், கன்னட நடிகர் ராஜ்குமார், முத்துராமன், விகே.ராமசாமின்னு பெரிய கூட்டமே இருக்கும். அத்தனை பேரும் சினிமா சம்பந்தப்பட்டவங்கதான். ஆனா ‘யாரும் சினிமா பத்தி பேசக்கூடாது’ன்னு கண்டிஷன் போட்ருவாரு நம்பியார் குருசாமி. அப்படி மீறி யாராவது பேசினா அம்பது ரூபா ஃபைன் கட்டணும்.

சினிமாப் பேச்சுன்னு இல்ல, சிகரெட் பிடிச்சாலும் 50 ரூபா ஃபைன். சிவாஜி சார், ரஜினி சார்லாம் சிகரெட் பிடிச்சிக்கிட்டே இருப்பாங்க. விகே.ராமசாமி சாரும் அப்படித்தான். ஆனா, நம்பியார் குருசாமி வீட்லருந்து இருமுடி கட்டி, பஸ்ல ஏறியாச்சுன்னா, எல்லாரும் பெட்டிப் பாம்பா அமைதியாகிருவாங்க.

மலையேறி, ஐயப்பனை ஒருதடவைதான் தரிசனம் பண்ணுவாரு நம்பியார் குருசாமி. ஒருமுறை குருசாமிகிட்ட, ‘ஏன் சாமி. உங்க கூட வந்தவங்கன்னு சொல்லியே, நாங்கள்லாம் ஆறேழு தடவை சாமி தரிசனம் பண்ணிட்டோம். நீங்க ஒருதடவை மட்டும் தரிசனம் பண்ணிட்டுப் பேசாம இருந்துடுறீங்களே’ன்னு கேட்டேன். அதுக்கு நம்பியார் குருசாமி, ‘ஐயப்பனை நாம தரிசனம் பண்றது முக்கியமா, அவன் நம்மளைப் பாக்கறது முக்கியமா? அவன் நம்மளைப் பாத்தா போதும். அவன் செங்கோல் வைச்சு ராஜாங்கம் பண்ற இடத்துக்கு வந்துட்டோம். அவன் நம்மளைப் பாத்துக்கிட்டேதான் இருக்கான். அதுபோதும்’னு விளக்கம் சொன்னாரு.

சபரிமலை தரிசனம்லாம் முடிஞ்சு, சென்னைக்கு வந்ததும், ரஜினி சாரைப் பாத்து, ‘ரஜினி சாமி.. பரவாயில்லியே... இந்த தடவை, சிகரெட்டும் குடிக்கலை. அதனால 50 ரூபா ஃபைனும் கட்டலை. விரத நாள் முழுக்க சிகரெட் புடிக்காமத்தான் இருந்தீங்களா?’ன்னு நம்பியார் குருசாமி கேட்டார். ‘ஆமாம் சாமி. முயற்சி பண்ணிப் பாக்கலாமேன்னு இருந்தேன். கிட்டத்தட்ட 42 நாளும் சிகரெட் புடிக்கவே இல்ல சாமி என்றார் ரஜினி. அதைக்கேட்டதும் குருசாமி தொடங்கி சிவாஜி சார் உட்பட எல்லாரும் ரஜினியை ஆச்சரியமாப் பாத்தாங்க, பாராட்டினாங்க'' என்கிறார் வீரமணி.