புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை மீரா மிதுன் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜாராகததால் கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி கைது செய்தனர். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ​ஜாமீன் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்திருந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மீரா மிதுன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் தொடர்ந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுனை எம்கேபி நகர் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020 செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மீரா மிதுனை நாளை காலை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.