15 வயதில் பாலியல் தொல்லை அனுபவித்து இருப்பதாக நடிகை இஷா கோபிகர் கூறியுள்ள நிலையில்,  அப்படி இஷாவிடம் அத்துமீறிய நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாடகி சின்மயி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.  தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இஷா கோபிகர். தமிழில்  என் சுவாசக்காற்றே,  ஜோடி ,  நெஞ்சினிலே , நரசிம்மா ,  உள்ளிட்ட  படங்களில் நடித்து பிரபலமான  இஷா கோபிகர்.  தற்போது பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.

 

பெரும்பாலும் ஊடக வெளிச்சத்தில் தலை காட்டாத இஷா,  தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,  சினிமா வாய்ப்பு தேடி தான் அலைந்தபோது சந்தித்த  அனுபவங்களையும் சுவாரசியங்களை அவர் பகிர்ந்துள்ளார்.  அப்போது பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஒரு தயாரிப்பாளர் தன்னை அழைத்ததாகவும்,  பின்னர் படத்தின் ஹீரோவை போய் பார்க்குமாறு அவர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . பின்னர் அந்த ஹீரோவை தான் சந்தித்த போது,  தன்னுடன் யார் வந்திருக்கிறார் என்று அந்த ஹீரோ கேட்டதாகவும்,   ட்ரைவர் வந்திருக்கிறார் என சொன்னதற்கு, அப்படியென்றால் நாளைக்கு தனியாக வரும்படி அந்த ஹீரோ தன்னிடம் கூறியதாகவும் இஷா கோபிகர்  தெரிவித்துள்ளார்.  அத்துடன் மறுநாள் குறிப்பிட்ட தயாரிப்பாளருக்கு போன் செய்து தன்னுடைய திறமைக்கு மட்டும் மதிப்பளித்து வாய்ப்பு கொடுத்தால் போதும் மற்ற வழிகளில் வேண்டாமென தான் தெரிவித்து விட்டதாக அதில் கூறியிருந்தார்.

அவரின் மனம் திறந்த இந்த பேட்டி  இந்திய திரையுலகையே அதிர வைத்துள்ளது, இந்நிலையில் இஷா கோபிகரின் பேட்டியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாடகி சின்மயி,  '' 15 வயது பெண்ணை தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள நடிகர் அழைத்திருந்தால்,  அவர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளி, எனவே  குழந்தைகள் மீது பாலியல் விருப்பம் கொள்பவர்கள் மீது போஸ்கோ சட்டத்தை பயன்படுத்தி சிறையில் தள்ள வேண்டும்.  என நான் விரும்புகிறேன்.  என்று பதிவிட்டு இஷா கோபிகருக்கு  ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சின்மயி.