Master Mahendran Apologises to People : தான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அதுகுறித்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளதோடு, மன்னிப்பும் கேட்டிருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் மின்வெட்டு மற்றும் சோலார் பேனல் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், கடுமையான ட்ரால்களையும் ஏற்படுத்தின. இதையடுத்து, தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்காக விரிவான விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வீடியோவில் பேசிய மகேந்திரன், தன்னைப் பற்றிய விமர்சனங்கள் பலராலும் தவறான கோணத்தில் பரப்பப்பட்டதாக வேதனை தெரிவித்தார். குறிப்பாக, தன்னை நன்கு அறிந்தவர்கள்கூட தனது கருத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் விமர்சித்தது வருத்தமளித்ததாக கூறினார். நேர்காணலில் இடம்பெற்ற "கேள்வி கேட்டால் உடனே பிரச்னை தீர்ந்துவிடுமா?" என்ற தனது கருத்து பொதுமக்களை நோக்கியதல்ல என்றும், மின்சார பிரச்னையை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துபவர்களை நோக்கித்தான் கூறியதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், "ஆறு மாதங்கள் கேள்வி கேட்காதீர்கள்" என்ற கருத்து தொடர்பாகவும் அவர் விளக்கம் அளித்தார். அது பொதுமக்களுக்கு எதிரான கருத்தல்ல என்றும், ஆட்சிப் பொறுப்பேற்கும் முன் முதல்வர் விஜய் கேட்ட கால அவகாசத்தை மேற்கோள் காட்டியே அந்த வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

View post on Instagram

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த மகேந்திரன்

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட "சோலார் சிஸ்டம்" குறித்த தனது பேச்சு ஒரு வார்த்தைப் பிழை என்பதை மகேந்திரன் ஒப்புக்கொண்டார். சோலார் எனர்ஜி அல்லது சோலார் பேனல் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் தவறுதலாக "சோலார் சிஸ்டம்" என கூறிவிட்டதாக தெரிவித்த அவர், அதனை தேவையற்ற அளவுக்கு கேலி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

சோலார் மின்சாரத்தின் அவசியம் குறித்து பேசும்போது, கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் முழுமையாக சூரிய சக்தி மூலம் இயங்கும் திட்டத்தை எடுத்துக்காட்டிய மகேந்திரன், தமிழ்நாட்டிலும் இதுபோன்ற திட்டங்கள் விரிவாக செயல்படுத்தப்பட்டிருந்தால் தற்போதைய சூழலில் பெரும் பயன் கிடைத்திருக்கும் என்ற எண்ணத்தில்தான் அந்த கருத்தை பகிர்ந்ததாக கூறினார்.

அதேபோல், "என் வீட்டிலிருந்து கரண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்" என்ற தனது பேச்சும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். தனது நோக்கம், மக்கள் சந்திக்கும் சிரமத்தை தானும் அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன் என்பதைத்தான் வெளிப்படுத்துவதாக இருந்தது என்றார்.

இதற்கிடையில், தன்னை திமிர்பிடித்தவராக சித்தரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரவி வரும் சில குற்றச்சாட்டுகளுக்கும் மகேந்திரன் பதிலளித்தார். குறிப்பாக, இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் மரியாதையற்ற வகையில் நடந்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் முற்றிலும் பொய்யானது என்றும், அதனை பரப்பிய நபரே பின்னர் அது வெறும் நகைச்சுவைக்காக கூறப்பட்டதாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, மக்களின் துயரங்களை ஏளனமாகப் பார்க்கும் மனிதர் தானல்ல என்றும், இன்று தான் இருக்கும் நிலைக்கு காரணம் மக்கள்தான் என்பதால் அவர்களை அவமதிக்கும் எண்ணமே தனக்கில்லை என்றும் உணர்ச்சிபூர்வமாக பேசிய மகேந்திரன், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தனது கருத்துகளை மக்கள் சரியான கோணத்தில் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.