1990-களில் ரஜினி மற்றும் கமல்ஹாசனின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகையில் தமிழகம் திமிலோகப்படும். அதிலும் ஒரே காம்ப்ளக்ஸில் இரண்டு தியேட்டர்கள் இருந்துவிட்டால் கத்திக் குத்து நிச்சயம். ரசிகர்கள் இப்படி ’ஸ்டைல் மன்னனா?’ ‘காதல் இளவரசனா?’ என்று மோதி மோதி மண்டைகளை உடைத்துக் கொள்வார்கள் ரசிகர்கள். ஆனால் அதேநாளில் மகாபலிபுரம் சாலையில் ஏதோ ஒரு ரெசார்ட்டில் ரஜினி குடும்பமும், கமல் குடும்பமும் ஒன்றாக கூடி களித்துக் கொண்டிருப்பார்கள். 

கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக இந்த அசிங்கத்திலிருந்து விடுபட்டுக் கிடந்தது தமிழகம். ஆனால் இந்த வருடம், அதிலும் இதோ புதிதாய் பிறந்த 2019ல் அந்த கற்காலத்தை ஹைடெக் வடிவில் மீண்டும் கண் முன் கொண்டு வந்துவிட்டார்கள் என்று வெளிப்படையாகவே சாடுகிறார்கள் சினிமா விமர்சகர்கள் இப்படி...”ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியாகி மோத, இரு தரப்பு ரசிகர்களும் அதன் ஃபர்ஸ்ட்  லுக் வெளியானதில் துவங்கிய வெறுப்பு மோதலை, இதோ ரிலீஸ் நாளில் தியேட்டரில் சண்டையிட்டு ரத்தம் பார்த்தது வரை சூடு குறையாமல் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். 

குத்துப் பட்ட இடம் கூட புண் ஆறியதும் காணாமல் போய்விடும். ஆனால், இணைய தளங்களில் இரு தரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி படு ஆபாசமாக திட்டுவதுதான் அசிங்கம் மற்றும் அவலத்தின் உச்சம். ரஜினி ரசிகர் ஒருவர் ‘தலைவன் இன்னைக்கு பேட்ட! நாளைக்கு கோட்ட’ என்று போட, அதற்கு அவரது அம்மாவை பற்றி அசிங்கமாய் திட்டுகிறார் அஜித்தின் ரசிகர். அஜித்தின் ரசிகர் ஒருவர் ‘அடிச்சு தூக்கிய ஆம்பள’ என்று தன் ஹீரோவை புகழ, அதற்கு ரஜினி ரசிகரான ஐம்பது வயது மனிதர் ஒருவர் அந்த ரசிகரின் அப்பாவையும், சகோதரியையும் மகா கேவலமாய் திட்டுகிறார்.

 

பரஸ்பர திட்டுக்கள் வெறுமனே கமெண்ட் பாக்ஸில் முடிந்துவிட்டாலும் கூட பரவாயில்லை. பல ரசிகர்களோ எதிர்தரப்பின் ஐடிக்குள் சென்று, அவர்களின் போட்டோ கேலரியில் இருக்கும் குடும்பத்தினரின், பெண்களின் போட்டோக்களை எடுத்துப் போட்டு அசிங்கம் அசிங்கமாய் வர்ணிப்பதும், போட்டோ ஷாப் செய்து மானபங்கப்படுத்துவதும் காரியங்களையும் செய்கிறார்கள். அந்தப் பெண்களுக்கு இந்த விவகாரம் தெரிந்தால் தூக்கில் தொங்கிவிட மாட்டார்களா? அதேவேளையில் இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனித்தாக வேண்டும். ஆண் ரசிகர்கள் மட்டுமில்லை, பெண் ரசிகைகளும் களத்தில் இருக்கிறார்கள். 

அஜித்தின் பெண் ரசிகைகள் ரஜினியை லேசுபாசாக திட்ட, அதற்கு ரஜினியின் ஆண் ரசிகர்கள் கொடுக்கும் பதில்கள் எல்லாம் தரைலோக்கலிலும் தறுதலையான வார்த்தைகள். அப்பா, அம்மா, அக்கா தங்கைகள், மனைவி, மச்சினிச்சி, கொழுந்தியாள், பக்கத்து வீட்டு பெண்மணிகள் என்று ஆரம்பித்து எதையும் விட்டு வைக்காமல் வெறித்தனமான கெட்ட வார்த்தைகளில் வேக வைக்கிறார்கள். இதையெல்லாம் சகிக்கவே முடியவில்லை. 

 இவர்களுக்கு நடுவில் விஜய் ரசிகர்களும் இந்த களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் ரஜினியை திட்ட மீதி பேரோ தங்களின் நிரந்தர எதிரியான அஜித்தை திட்டியிருக்கிறார்கள். அந்த இரு தரப்பும் சேர்ந்து விஜய்யை மிக மிக கேவலமாக திட்டியிருக்கிறார்கள். 

ஆன்லைனில் இப்படியொரு அசிங்க யுத்தம் நடந்து கொண்டிருப்பது இந்த மாஸ் ஹீரோக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் யாரும் வாய் திறப்பதில்லை. காரணம் நடக்கும் மோதலால் தங்களின் படத்துக்கு வசூல் எகிறும், தங்களின் மாஸ் அதிகரிக்கும் என்று மட்டுமே நினைக்கிறார்கள். இன்றைக்குதான் ரஜினியின் ரசிகர்கள் இதில் குதித்துள்ளனர். அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு சதா சர்வகாலமும் இதே வேளைதான். இந்த ஹீரோக்கள் இனியாவது இந்த சண்டைகளை வாய் மூடி வளர்த்துவிடாமல், கண்டித்து நிறுத்த வேண்டும். ‘ரசிகர் மன்றமே எனக்கு வேண்டாம். பிடிச்சவன் என் படத்தை பாரு!’ என்று சக ஹீரோக்களுக்கு வகுப்பெடுத்த அஜித்தும் வாயை பொத்திக் கொண்டு இருப்பதுதான் எப்படி என்று புரியவில்லை!

 

 மாஸ் ஹீரோக்களே, உங்கள் ரசிகனின் பணத்தை நீங்கள் உறிஞ்சுவதை கூட சகிக்கலாம், ஆனால் அவன் குடும்ப மானமும் உங்களுக்காக காற்றில் பறப்பது எப்படி நியாயம்? இந்த சண்டையின் உச்சமாக ஒரு நாள் உங்கள் குடும்ப பெண்களின் படங்களையும் வெட்டி, ஒட்டி இவர்கள் பயன்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. அன்றைக்குதான் உங்களுக்கு வலிக்கும்!ஆனால் அதற்குள் எல்லை கடந்து போயிருக்கும் எல்லாம்.” என்று முடித்தனர். சிந்தியுங்க ஹீரோஸ்!