மாமன்னனை பார்த்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டித்தழுவி கொண்டாடினார் - மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
மாமன்னன் படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக மாரி செல்வராஜ் கூறி உள்ளார்.
அமைச்சர் ஆனதால் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நடித்த திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் உதயநிதியின் தந்தையாக வடிவேலு நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதுமட்டுமின்றி வடிவேலு இப்படத்தில் சீரியஸ் ஆன கேரக்டரில் நடித்துள்ளதாலும் இப்படத்தை பார்க்க ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு பக்ரீத் விருந்தாக இப்படம் இன்று திரையரங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணினாரா? சலிப்படைய வைத்தாரா? - மாமன்னன் படத்தின் விமர்சனம் இதோ
மாமன்னன் படம் ரிலீஸ் ஆகும் முன்பே நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் ஆகியோருக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. படத்தைப் பார்த்து சிலாகித்து போன அவர்கள் இருவரும் படக்குழுவை பாராட்டினர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மாரி செல்வராஜையும், நடிகர் உதயநிதி ஸ்டாலினையும் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
கமல், தனுஷுக்கு அடுத்தபடியாக மாமன்னன் படத்தை ரிலீசுக்கு முன் பார்த்த மற்றுமொரு பிரபலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அவர் படத்தை பார்த்த பின்னர் கட்டித்தழுவி கொண்டாடியதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... 'தேவர் மகன்' சர்ச்சைக்கு மத்தியில்.. 'மாமன்னன்' படம் பார்த்த கமல்! மாரி செல்வராஜ் போட்ட நெகிழ்ச்சி பதிவு!