பாடகி சின்மயி, வைரமுத்து மீது புகார் அளித்தால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை காவல் துறை எடுக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகியும் டப்பிங் ஆர்டிஸ்ட்டான சின்மயி, தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து உள்ளிட்டவர்கள் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். பாலியல் தொல்லை கொடுத்ததாக வைரமுத்து மீது எழுந்த புகார் தமிழ் சினிமாவையே அதிரவைத்துள்ளது. சின்மயி-ன் இந்த புகாரருக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் வைரமுத்து. அவரது இந்த பதிவுக்கு சின்மயி, ‘பொய்யர்’ என ரிப்ளை செய்திருந்தார். 

திரையுலகம், இசையுலகம், சின்னத்திரை, தாய் மகளுக்கு பாலியல் தொந்தரவு என பல்வேறு புகார்கள் மீடூ ஹாஷ்டாக்கில் வெளியாகி வருகிறது. வெளிநாடுகளில் உலா வந்த மீடு ஹாஷ்டாக் பாலியல் புகார், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்த நிலையில், கடந்த 3-4 நாட்களாக மீடு ஹாஷ்டாக்-ல் பாலியல் புகார்கள் தமிழகத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மீடு ஹாஷ்டாக் பாலியல் புகாரை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. மீடு ஹாஷ்டாக் மூலம் வரும் புகார்களை விசாரிக்க குழு அமைப்பதற்கு, மத்திய குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், சின்மயி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, பாடகி சின்மயி புகார் அளித்தால், என்ன நடவடிக்க எடுக்க வேண்டுமோ அதனை காவல் துறை எடுக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.