Many producers including Ashok Kumar are working on borrowing

அசோக் குமார் உட்பட பல தயாரிப்பாளர்கள் கடன் வாங்கியே தொழில் செய்கின்றனர் எனவும் கந்துவட்டி கேட்டு தயாரிப்பாளர்களை கொடுமை படுத்தினால் நடப்பதே வேறு எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சசிகுமாரின் படத் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த அசோக்குமார் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கந்துவட்டியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை பைனான்சியர் அன்பு செழியனிடம் வாங்கிய பணத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பல லட்சங்கள் வட்டியாக கொடுத்திருந்தும் தொடர்ந்து கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் கேவலமாக அன்பு செழியின் மிரட்டுவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

இதையடுத்து அன்பு செழியன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, அன்புச்செழியன் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கந்துவட்டி கேட்டு தயாரிப்பாளர்களை கொடுமை படுத்தினால் நடப்பதே வேறு தெரிவித்தார். 

அரசியல்வாதிகளோ, மந்திரிகளோ, எம்.எல்.ஏக்களோ இதில் தலையிட்டு அன்புசெழியனை தப்பிக்க வழிவகை செய்தால் அவர்களையும் விடமாட்டோம் எனவும் திரைத்துறையில் ஏராளமான கட்டப்பஞ்சாயத்துக்கள் நடைபெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டார். 

தற்கொலை செய்து கொண்ட அசோக் குமார் எழுதி வைத்த கடிதத்தில் முழு விபரமும் வெளிவந்துள்ளதாகவும் இனி எந்த தயாரிப்பாளர்களுக்கும் இது போன்ற நிலை வரவிடமாட்டேன் எனவும் விஷால் தெரிவித்தார். 

கந்துவட்டியால் தானும் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவும் 90 சதவீத தயாரிப்பாளர்கள் கடனில் தான் இருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார். 

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காவல்துறை நீதி வழங்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் ஒன்றாக சேர்ந்து கந்துவட்டியை ஒழிப்போம் எனவும் வலியுறுத்தினார்.