தமிழில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'அசுரன்' படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை மஞ்சுவாரியர்.

இந்த படத்தை, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் வாரி குவித்தது. தற்போது இந்த படத்தை தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

மேலும் இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார் மஞ்சுவாரியர். தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் இவரின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளதாக, நடிகர் மம்முட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கிட்ட தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள படங்களில் நாயகியாக நடித்து வரும் இவர், பல முன்னணி நடிகர்களுடன் நடித்த போதிலும், மம்முட்டியுடன் மட்டும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. ஒரு சில காரணங்களால் மஞ்சு வாரியருடன் நடிப்பதை அவரே தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இவருடைய நீண்ட நாள் கனவை நிறைவு செய்யும் விதமாக, தற்போது மஞ்சு வாரியார் அறிமுக இயக்குனர் ஜோபின் டி சாக்கோ இயக்கும் 'தி பிரைஸ்ட்' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் திரில்லர் படமாக உருவாக உள்ளதாம். முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மஞ்சுவாரியர், மம்முட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.