’பம்பாய்’ படத்தில் ‘உயிரே உயிரே’ பாடலின் தமிழக மக்களின் உயிருக்குள் ஊடுருவிய மனீஷா கொய்ராலா ‘ஹீலர்;  எனக்கு மறுவாழ்வு தந்த கேன்சர்' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தில் கொஞ்சமும் தயங்காமல் தன் வாழ்வு குறித்த பல உண்மைகளை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

நேபாள் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரான மனீஷா தனது 19 வயதில் இந்தி சினிமாவில் அறிமுகமானார். 1991ல் ‘சவுதாகிர்’ படத்தின் மூலம் அறிமுகமான அவர்,’1942 எ லவ் ஸ்டோரி, ‘அகேலா ஹம் அகேலா தும்,’லஜ்ஜா’மணிரத்னத்தின்  ’தில் ஷே’ போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தி சினிமாவின் நம்பர் ஒன் நடிகை ஆனார். தமிழில் ‘பம்பாய்’,’முதல்வன்’ படங்களின் மூலம் கோடம்பாக்கத்திலும் மனீஷாவின் கொடி பறந்தது.

பின்னர் 2012ம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்தார். பின்னர் அதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த அவர் தனது சுயசரிதையை எழுதி இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

அதில் தான் சினிமாவுக்கு வந்த புதிதில் பாலிவுட்டின் பரபரப்பை எதிர்கொள்ளமுடியாமல் தவித்தபோது குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாகவும், கேன்சர் வந்ததை ஒரு சவாலாக எடுத்து மீண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘என்னைப் பொருத்தவரை கேன்சர் எனக்குக் கிடைத்த வரம் என்றுதான் சொல்வேன். ஏனெனில் வாழ்க்கை குறித்த புரிதல்களையும், புதிய அனுபவங்களையும் எனக்கு அந்த நோய் கற்றுக்கொடுத்தது. வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது பெருங்குடிகாரியாக மாறி ஆடினேன். குடிக்காமல் ஒரு நாள் கூட என்னால் இருக்கமுடியாது. ஒன்று என் வீட்டில் பார்ட்டி நடக்கும். அல்லது பார்ட்டி நடத்தும் ஒருவர் வீட்டில் நான் இருப்பேன் என்கிற அளவுக்கு போதைக்கு அடிமையாகிவிட்டேன். அதற்கு முடிவுகட்ட, எனக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் பரிசாகவே கேன்சர் வந்தது என்று எடுத்துக்கொண்டேன். இப்போது நான் முற்றிலும் துறந்த புது மனுஷி’ என்கிறார் மனிஷா கொய்ராலா.