லோகேஷ் கனகராஜ் எடுப்பது போல மணிரத்னம் யூனிவர்ஸ் எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு இயக்குனர் மணிரத்னம் விளக்கமளித்துள்ளார்.
ஐந்து வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ்
தமிழ் திரையுலகில் ஐந்து படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், முக்கிய இயக்குனராக மாறி இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான லோகேஷ், தனது முதல் படத்தையே வெற்றிப் படமாக மாற்றி இருந்தார். தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என ஐந்து படங்களை இயக்கினார். ஐந்து படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
புதிய அனுபவத்தைக் கொடுக்கும் லோகேஷின் LCU
போதை மருந்து, கடத்தல், கலாச்சாரம் சென்னை போன்ற பெருநகரங்களின் இருண்ட உலகத்தைக் காட்டுவது என அவர் படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து வருகிறது. மேலும் அவரின் ஒரு படத்தில் வரும் கதாபாத்திரம், அடுத்த படத்திலும் தொடர்ச்சியாக வருவதை ரசிகர்கள் ‘லோகி சினிமேட்டிக் யூனிவர்ஸ்’ (LCU) என அழைத்து வருகின்றனர். இதுவரை தமிழ் இயக்குனர்கள் கொடுக்காத புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் கைவசம் உள்ள படங்கள்
எனவே லோகேஷ் எப்போது புதிய படத்தை தொடங்கினாலும் அது எல்.சி.யூவா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ படத்தை இயக்கி வரும் அவர் இது முழுக்க முழுக்க புதிய கதை என்றும், இதில் எல்.சி.யூ இல்லை என்றும் விளக்கியுள்ளார். 'கூலி' படம் முடிந்த பிறகு ‘விக்ரம்’ படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து தனியாக படம் எடுப்பதாக சொல்லி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மணிரத்னம் யூனிவர்ஸ் வருமா?
இந்த நிலையில் மணிரத்னம் கமல், சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, அபிராமி உள்ளிட்டோரை வைத்து கேங்ஸ்டர் படமாக ‘தக் லைஃப்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மணிரத்னத்திடம் லோகேஷ் யூனிவர்ஸ் போல மணிரத்னம் யூனிவர்ஸ் வருமா என செய்தியாளர்கள் கேட்டனர்.
லோகேஷால் மட்டுமே முடியும் - மணிரத்னம் பதில்
அதற்கு பதிலளித்த மணிரத்னம், “ஒரு படம் எடுப்பதற்கே கடினமாக இருக்கிறது. நான் யூனிவர்ஸ் எடுப்பதற்கு தான் சரியான ஆள் கிடையாது. அதற்கு லோகேஷ் கனகராஜ் தான் சரியான ஆள்” எனக் கூறினார்.
