‘பொன்னியின் செல்வன்’படம் குறித்த எந்த செய்தியையும் நிறுவனத்தின் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்ற அறிவிப்பையும் மீறி தற்பெருமை மன்னன் வைரமுத்து தான் அப்படத்தில் 12 பாடல்கள் எழுதுவதாக செய்திக்குறிப்பு வெளியிட்டதால் அவரைப் படத்திலிருந்து தூக்கி எறிய இயக்குநர் மணிரத்னம் முடிவெடுத்துவிட்டதாக அப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’படம் குறித்து இதுவரை நூற்றுக்கணக்கான செய்திகள் வந்துள்ளன. அப்பட நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுவரை வாயைத்திறந்து ஒரு வார்த்தை கூட சொல்லாத நிலையில் இந்திய சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களின் பெயர்களும் அப்படத்துடன் இணைக்கப்பட்டன. மணிரத்னத்துக்கே தெரியாமல் கூட விஜய் சேதுபதி, சிம்பு போன்றவர்கள் பலமுறை அப்படத்துக்கு உள்ளே வருவதும் பின்னர் கால்ஷீட் பிரச்சினைகளால் வெளியே போவதுமாக இருந்தார்கள்.

இந்நிலையில் முதல் அதிகாரபூர்வமான வெளியேற்றமாக திருவாளர் வைரமுத்து இருக்கப்போவதாக மணிரத்ன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு பத்திரிகை குறிப்பு ஒன்றை வெளியிட்ட வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’படத்தில் 12 பாடல்கள்  இடம் பெறப்போவதாகவும் அவற்றை தனது சுந்தரத்தமிழால் செதுக்கப்போவதாகவும் இறுமாப்புடன் அறிவித்திருந்தார். அந்த அகங்கார அறிவிப்பை மணிரத்னம் ரசிக்கவில்லையாம். எனவே அவரை இப்படத்துக்கு அழைப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கும் அவர் இம்முறை,...’சோடை எல்லாம் விட்டுத்தள்ளு, பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு’...என்று முடிவெடுத்து  புதிய திறமையான கவிஞர்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளாராம்.