பல ஆண்டுகளாகவே வாடகை வீட்டில் வசித்துவரும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர் ஒருவர், தனது சொந்த நிலத்தில் ரஜினியின் பெற்றோருக்காக மணி மண்டபம் கட்டி முடித்து, நேற்று அதற்கு திறப்பு விழாவும் நடத்தினார்.

திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகியாக இருப்பவர் ஸ்டாலின் புஷ்பராஜ் (50). இவர், திருச்சி குமாரமங்கலம் பைபாஸ் சாலை அருகில் தனக்குச் சொந்தமான சுமார் 1,850 சதுர அடி இடத்தில் நடிகர் ரஜினியின் பெற்றோர் ராமோஜிராவ் – ராம்பாய் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டி வந்தார். இதில், ரஜினியின் பெற்றோரின் மார்பளவு வெண்கல சிலைகள், இரண்டரை அடி உயர சிவலிங்கம் ஆகியவை வடிவமைக்கப்பட்டன.

இந்த மணிமண்டபத்தை ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் நேற்று திறந்து வைத்துள்ளார். இந்த விழாவில், ரஜினியின் உறவினர்கள், ஸ்டாலின் புஷ்பராஜ் குடும்பத்தினர், ரஜினி மக்கள் மன்ற கர்நாடக மாநிலத் தலைவர் சி.எஸ்.சந்திரகாந்த், மாநிலச் செயலாளர் எம்.பி.வெங்கடேஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினியின் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

தனது சொந்த நிலத்தில் ரஜினியின் பெற்றோருக்கு பல லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டியுள்ள ஸ்டாலின் புஷ்பராஜ், பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து, ஸ்டாலின் புஷ்பராஜ் கூறுகையில், ’கடந்த 2016ம் ஆண்டு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது, அவர் குணமடைந்தால் அவரது பெற்றோருக்கு ஆயுள் வரை வழிபாடு செய்வதாக வேண்டிக் கொண்டேன். இதையடுத்து, ரஜினி குணமடைந்தார். எனவே, ரஜினியைக் காப்பாற்றிய பெற்றோருக்கு என் சொந்த நிலத்தில், பல லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளேன். வாரந்தோறும் வியாழக்கிழமை இங்கு வழிபாடு நடத்தி, அன்னதானம் வழங்கப்படும். 

இந்த மணிமண்டபத்திற்கு வருமாறு ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு கொடுத்தேன். அவரும், வருவதாக உறுதியளித்துள்ளார். விரைவில், கண்டிப்பாக இந்த மணிமண்டபத்திற்கு ரஜினிகாந்த் வருவார் என்றும்  அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.