நடிகர், நடிகைகளின் விசிறிகளில் ரசிகர்கள், வெறியர்கள், பைத்தியங்கள் என்று மூன்று வகையினர் இருக்கிறார்கள். இதில் எந்த வகையறாவைச் சேர்ந்தவர் என்று புரிந்துகொள்ளமுடியாத ஒருவர் தனது சொந்த நிலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார்.
 
ரஜினி மக்கள் மன்றத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகி ஸ்டாலின் புஷ்பராஜ் (50). இவர், திருச்சி,  குமரமங்கலம் பை பாஸ் ரோடு அருகே, அவருக்குச் சொந்தமான 1,850 சதுர அடி இடத்தில் நடிகர் ரஜினி காந்தின் பெற்றோர் ராமோஜிராவ் - ராம்பாய் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார். இந்த மண்டபத்தை, வரும் 25ம் தேதி ரஜினியின் சார்பில் அவரது  சகோதரர் சத்யநாராயண ராவ் திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் ராஜு கூறியதாவது: “மணிமண்டபம் அமைப்பது குறித்து கேள்விப்பட்ட ரஜினி காந்த், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மணிமண்டபத்தில், அவரது பெற்றோரின் மார்பளவுச் சிலை திறக்கப்படும். இது, ரஜினி மீது ரசிகர் கொண்ட பாசத்தின் காரணமாக கட்டப்பட்டது. வேறு எந்த காரணமும் இல்லை. இந்த மணிமண்டபத்தை தனி நபர் கட்டியிருந்தாலும், திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில்தான் திறப்பு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

என்ன காரணத்தாலோ ரஜினி இந்த மணிமண்டபத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை.