ரஜினியின் மிக நெருங்கிய நண்பரும் தெலுங்கு சினிமாவின் முன்னாள் சூப்பர் ஸ்டாருமான மோகன் பாபுவின் மகன் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார். இச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் கனத்த இதயத்துட அவர் வெளியிட்டிருக்கிறார்.

சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ்ப்படமான திருடா திருடியின் ரீமேக்கான ’தொங்கா தொங்கடி’படம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் மனோஜ் மஞ்சு. ரஜினியின் ஆத்மார்த்தமான நண்பர் மோகன் பாபுவின் வாரிசான இவர் ஓரளவுக்கு ஹிட்கள் கொடுத்து தெலுங்கு சினிமாவில் தாக்குப்பிடித்து வருகிறார். இவரது ‘என்னைத் தெரியுமா?’உட்பட ஒன்றிரண்டு படங்கள் தமிழிலும் டப் ஆகியுள்ளன.இவர் தனது நீண்ட நாள் காதலி பிரணிதியை காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் அவ்வப்போது வந்த கிசுகிசுச் செய்திகளில் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. அச்செய்திகள் குறித்து மனோஜோ அவரது மனைவி பிரணிதியோ எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இப்போது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர்,...கனத்த இதயத்துடன் இதைத் தெரிவிக்கிறேன். கருத்துவேறுபாடு காரணமாக, 2 வருடமாக நாங்கள் பிரிந்துதான் வாழ்ந்து வந்தோம்.சில சுயபரிசோதனைக்குப் பிறகு மிகுந்த வலியுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்றுவிட்டோம். நன்றாக நேசித்த அழகான உறவை அதிகாரப்பூர்வமாக முறித்துக்கொண்டோம். அந்த கடினமான தருணங்களில் எனக்கு ஆறுதலாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்கிறேன். இனி என் கவனம் முழுக்க நான் எப்போதும் நேசிக்கும் சினிமா மீதே இருக்கும்...என்று பதிவிட்டிருக்கிறார். மனோஜின் விவாகரத்து செய்தியைப் பார்த்து ஆந்திரத் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.