மல்லூவுட்டின் மெகா ஸ்டாரான மம்மூட்டி அநாயசமான நடிகர் என்பதையும் தாண்டி அவருக்கு வேறு சில முகங்களும் உள்ளன. அருமையான எழுத்தாளர், தீவிர இலக்கிய காதலர், இயற்கை விவசாயி, மனிதநேயம் மிகுதியில் தன் ரசிகர் மன்றம் மூலமாக பல எளியவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் போக அவர் மிகப்பெரிய கார் காதலர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

யெஸ்! பர்ஃபார்மென்ஸில் பட்டையை கிளப்பும் எந்த காரும் இந்திய சந்தைகளை தொட்ட சில நாட்களிலேயே மம்மூட்டியின் போர்டிகோவில் பார்க்கலாம். அந்த வகையில் மம்மூக்காவின் கரங்களில் இருக்கும் கார்களின் எண்ணிக்கை முக்கால் சதத்தை தொடுகிறது என்கிறார்கள் அவரது உதவியாளர்கள். 

இந்நிலையில் மம்மூக்காவின் கார் கிரேஸை கவனித்து வைத்து, அதையே கதைக்கருவாக்கி செம பரபர திரைக்கதை ஒன்றை தயார் செய்திருக்கிறாராம் கேரளத்து புது முக இயக்குநர் அஜீ. மம்மூக்காவிடமும் கதையை சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டாராம். தலைவர் கமிட் ஆகியிருக்கும் பெரிய பேனர் படங்களை முடித்த பின் இந்த கார் ப்ராஜெக்டில் கால் வைப்பார் ஸாரி ஸ்டியரிங்கை பிடிப்பார் என்கிறார்கள். 

ஒரு கார்ப்பரேட் கார் டிஸைனர், ஒரு சாதாரண கார் மெக்கானிக் என்று இரண்டு கேரக்டர்களாம் மம்மூட்டிக்கு. தென்னிந்தியாவில் கார்களை வைத்து நடக்கும் தங்க கடத்தல் மற்றும் உடலுறுப்பு கடத்தல் விஷயங்களை கார்களை வைத்தே இந்த இரண்டு கேரக்டர்களும்  இணைந்து மடக்குவதுதான் தீம் என்கிறார்கள். உள்ளே ஏகப்பட்ட ஆக்‌ஷன் பிளாக்குகளாம். 

படத்திற்காக மம்மூட்டியின் சொந்த கலெக்‌ஷனிலிருக்கும் அவரது செம ஃபேவரைட் கார்கள் சிலவும் பயன்படுத்தப்பட இருக்கிறது என்கிறார்கள். ஆக மம்மூட்டியோடு இணைந்து அவரது கார்களும் அரிதாரம் பூசப்போகின்றன. 
எந்த கேரக்டராக இருந்தாலும் இறங்கியடிக்கும் மம்மூட்டிக்கு அவரது இஷ்ட கேரெக்டரென்றால் கசக்காவா செய்யும்! 
பின்னுங்க மம்மூக்கா.