கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து மலையாள நடிகர் செளபின் ஷாஹிர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Soubin Shahir Shares Coolie Movie Experience : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) 171வது படம் 'கூலி'. இப்படத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் என்கிற மலையாள படம் மூலம் பிரபலமான நடிகர் சௌபின் ஷாஹிர் (Soubin Shahir) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். 'கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள சௌபின், ரஜினியுடன் நடித்த அனுபவம் வார்த்தைகளில் சொல்ல முடியாதது என்றும், அவரது இருப்பு படப்பிடிப்பு தளத்திற்கே புதிய உற்சாகத்தை கொடுத்ததாகவும் கூறினார்.
ரஜினி குறித்து செளபின் ஷாஹிர் புகழாரம்
"ரஜினி சாருடன் பணிபுரிந்த அனுபவம் சொல்ல வார்த்தைகளே இல்லை. அவரது இருப்பு படப்பிடிப்பு தளத்திற்கே புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. அவரது ஸ்டைல் அபாரம்!" என்று சௌபின் கூறினார். "சிறு வயதிலிருந்தே அவரை திரையில் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். அவரது ஸ்டைல், அவரது ஸ்வாக் எல்லாவற்றையும் நேரில் பார்த்தபோது வேறலெவலில் இருந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். 'கூலி' படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

'கூலி' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இசை - அனிருத் ரவிச்சந்தர். படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. லோகேஷ் கனகராஜின் தனித்துவமான இயக்கம் மற்றும் ரஜினியின் மாஸ் அவதாரத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரஜினிகாந்தின் மகளாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கூலி ரிலீஸ் எப்போது?
கூலி திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான் போன்ற பான் இந்தியா நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ரிலீசுக்கு முன்பே கூலி திரைப்படத்தின் பிசினஸ் சூடுபிடித்துள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமம் மட்டும் ரூ.80 கோடிக்கு விற்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
