பிரபல நடிகரும் மலையாளப்பட உலகின் முன்னணி கதாசிரியரும் இயக்குநருமான சீனிவாசன் உடல் நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் பார்த்திபனின் ‘புள்ளகுட்டிக்காரன்’உட்பட சில படங்களில் நடித்திருக்கும் சீனிவாசன் மலையாளத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பல முக்கியமான படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ள அவர் ‘வடக்கு நோக்கி யாந்திரம்’,’சிந்தாவிஷ்டாயா சியாமளா’ஆகிய இரு சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கியுள்ளார். தேசிய விருது, மாநில விருதுகள் என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மகன் வினீத் ஸ்ரீனிவாசன், மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.

ஸ்ரீனிவாசனுக்கு கடந்த ஜனவரி மாதமே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்னைக்கு செல்ல கொச்சின் விமான நிலையம் வந்துள்ளார். அப்போது மீண்டும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்ரீனிவாசனின் உடல் நிலை சற்று தேறிய பிறகு, ஆஸ்டெர் மெட்சிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவரது உடல்நிலை சற்று கவலைப்படத்தக்க வகையில் உள்ளதாகவே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.