Malavika Mohanan Shares The Worst Incident : நடிகை மாளவிகா மோகனன் மும்பை லோக்கல் ரயிலில் தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இந்த கருத்துக்கு மும்பை போலீசார் அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளனர்.
Malavika Mohanan Shares The Worst Incident : சமீபகாலமாக பிரபலங்கள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் சிலர் மோசமான அனுபவங்களையும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக மும்பையில் போக்குவரத்து நெரிசலுக்கு பயந்து நட்சத்திர பிரபலங்கள் பொது போக்குவரத்தில் அதிகம் பயணிக்கின்றனர். நடிகை மாளவிகாவும் இதேபோல் லோக்கல் ரயிலில் சென்றபோது அவருக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டதாம். ஆனால் மாளவிகாவுக்கு இந்த அனுபவம் இப்போது ஏற்பட்டது அல்ல. சம்பவம் என்னவென்றால்?
மாளவிகா பேசுகையில், தான் கல்லூரி படிக்கும் காலத்தில் இரவு 9:30 மணியளவில் தோழிகளுடன் மும்பை லோக்கல் ரயிலில் பயணித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக விளக்கினார். “நாங்கள் பயணித்த முதல் வகுப்பு பெட்டியில் கிட்டத்தட்ட யாரும் இல்லை. சிறிது நேரத்தில் ஒரு நபர் ஜன்னல் கம்பிகளுக்கு அருகில் வந்து ‘ஒரு முத்தம் தருவாயா?’ என்று ஆபாசமாகக் கேட்டார். நாங்கள் மூவரும் அந்த சம்பவத்தால் பயந்து, என்ன செய்வதென்று தெரியாமல் முற்றிலும் உதவியற்றவர்களாகிவிட்டோம்,” என்றார் மாளவிகா.
அவர் பெட்டியின் வெளியில் இருந்து பேசியதால் நாங்கள் அவரைத் தடுக்க முடியவில்லை என்றும், சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு அடுத்த ரயில் நிலையம் வந்ததும் பயணிகள் உள்ளே வந்ததும் நாங்கள் நிம்மதி அடைந்தோம் என்றும் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியில் அவர் கூறியதை கவனித்த மும்பை போலீசார், தங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கு மூலம் பதிலளித்தனர். “அன்புள்ள மாளவிகா அவர்களே, உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதை நாங்கள் பார்த்தோம். இதுபோன்ற சம்பவங்கள் வேதனையானவை, நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நகரில் இதுபோன்ற ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் 112 அல்லது 100 என்ற எண்ணுக்கு அழைக்கவும். புகார் செய்யாவிட்டால் குற்றவாளிகளுக்கு தைரியம் வரும். மும்பை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம். இந்த இலக்கை அடைய நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மும்பை போலீசார் இந்த விஷயத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்வதாகவும், புகார் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
