அறுவை சிகிச்சைக்கு பின் கமலஹாசன் எப்படி இருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கும்,  மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கும் தெரிவிக்கும் விதமாக, அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததால் நடிகர் கமலஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  இதற்காக, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டிருந்தது.

ஒரு பக்கம் அரசியல், மற்றொரு புறம் திரைப்பட வேலை என பிசியாக இயங்கி கொண்டிருந்ததால், கமலஹாசனால் அந்த கம்பியை உரிய நேரத்தில் அகற்ற முடியவில்லை.  

இந்நிலையில் , கடந்த வாரம் 22 ஆம் தேதி அவரது காலில் வைக்கப்பட்ட கம்பி, அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அரசியல் மற்றும் திரைப்பட வேலைகளில் கமலஹாசன் கலந்து கொள்ளமாட்டார் என ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் சார்பில், வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் சிகிச்சை குறித்து மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ' நமது தலைவர் திரு.கமலஹாசன் அவர்கள், அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது. மருத்துவர்களின் ஆலோசனை படி,  இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், இனிய பணியாளர்களுக்கும் நன்றி. அத்துடன் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.