மதுரை மாநகரில் ஒட்டப்படும் போஸ்டர்கள் எப்போதும் சர்ச்சையை தூண்டுக் கூடியதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். அதுவும் விஜய் ரசிகர்கள் செய்யும் போஸ்டர் சேட்டைகளை சொல்லித்தான் தெரிய வேண்டும் இல்லை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் விதவிதமாக விஜய் முகத்தை வைத்து போஸ்டர் ஓட்டி அதிமுகவினரை கடுப்பேற்றி வருகின்றனர். 

 

 

மாஸ்டர் ரெய்டில் ஆரம்பித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாட்டு ரிலீஸ் போஸ்டர், ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என போஸ்டர், விஜய் பிறந்த நாள் போஸ்டர், கல்யாண நாள் போஸ்டர், மரம் நட்டத்துக்கு போஸ்டர் என விதவிதமாக போஸ்டர்களை ஒட்டி அட்டகாசம் செய்து வருகின்றனர்.

 

 

விஜய் ரசிகர்கள் இப்படி செய்தால் அஜித் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? அஜித்தின் “வலிமை” திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாக “வலிமை” திரைப்படம் தியேட்டரில் திரையிடப்படும் வரை வேறு எந்த படத்தையும் எந்த தளத்திலும் காண மாட்டோம் என உறுதிமொழியை ஏற்று அதை போஸ்டராக அடித்து ஒட்டினர். இப்படி இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் மாறி, மாறி மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டி வந்த நிலையில், 3வது இவர்களுடன் சூர்யாவின் ரசிகர்களும் இணைந்துள்ளனர். 

 

 

விஜய் ரசிகர்கள் விவேகானந்தர், எம்.ஜி.ஆர். என யோசித்தால் சூர்யா ரசிகர்கள் ஒரு படி மேலே போய் அவருக்கு சேகுவேரா கெட்டப் போட்டு போஸ்டர் ஓட்டியுள்ளனர். அத்துடன் “திரையுலகை ஆண்டது போதும்... தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே...!” என்று வாசகங்கள் எல்லாம் போட்டு வேற லெவலுக்கு வெறியேற்றியுள்ளனர். இந்த போஸ்டர் யுத்தம் அடுத்து எங்க கொண்டு போய் விடப்போகுதோ தெரியல...