madurai high court judgement in favour of dhanush
நடிகர் தனுஷ் தங்கள் மகன்தான் என்று மேலூர் தம்பதியர் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் கோரிய மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில் காணாமல்போன தனது மகன் கலைச்செல்வன் தான், திரைப்பட நடிகர் தனுஷ் என்று உரிமை கோரி இருந்தனர்.

மேலும், தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் தனுசின் அங்க அடையாளம் சரி பார்க்கப்பட்டது. மேலும், டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையில், தனுஷின் வழக்கறிஞர், ‘பணம் கேட்டு கதிரேசன் - மீனாட்சி தம்பதி மிரட்டுகிறார்கள்’ என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று வெளியானது. இதில் கதிரேசன் தரப்பினர், மனுவில் குறிப்பிட்டு இருந்த தகவல்கள் பொய்யானவை என்று கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
