பொங்கல் ஜல்லிக்கட்டுக்கு பரபரப்பாக தயாராகி வருகிறது அஜித்தின் ‘விஸ்வாசம்’. சமீபத்தில் வெளியான ‘தூக்குதுரை’ பாடலைப் பார்த்தபோது ஒரு விசயம் தெளிவானது. மொத்தக் கதையும் மதுரை பின்னணியில் நடக்கிறது. ஒரு காட்சி கூட, மதுரையில் எடுக்கப்படவில்லை!

முழு படத்தையும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், க்ளைமாக்ஸ் போர்ஷன் புனேவில் பத்து நாளும் எடுத்திருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. ஒரு ஷாட் கூட மதுரை மண்ணில் வைக்கவில்லை. இத்தனைக்கும் அஜித்தின் தீவிர ரசிகர்கள் இருப்பது மதுரையில்தான் அதிகம். எந்த அளவிற்கு என்றால் அஜித் தெரியாமல் தலையைத் திருப்பினாலும், நாடோடிகள் படத்தில் வரருகிற நமோ நாராயணன் மாதிரி உடனே போஸ்டர் அடித்து ஒட்டி வெறித்தனம் காட்டுவார்கள். 

மதுரைக்கே போகாமல், மதுரை மாதிரி மொத்தப் படத்தின் பின்னணியையும் செயற்கையாக உருவாக்கி எடுத்திருக்கிறார்கள். மதுரையில் இருந்து சுமார் 600  துணை நடிகர்களை அழைத்துக்கொண்டு போய் மொத்தப் படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. கிட்டதட்ட 100 நாட்கள் இந்த நடிகர்கள் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் போய் வருவதற்கான பயணச் செலவு, தங்குமிடம், சாப்பாடு என கணக்குப் போட்டால் ஒரு பட்ஜெட் படம் எடுத்திருக்க முடியும். பிறகு ஏன் மதுரையை தவிர்த்தனர்?

இது பற்றி இயக்குனர் தரப்பில் விசாரித்தால், ’’மதுரையில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்பதுதான் இயக்குனரின் திட்டம். ஆனால்,மதுரையில் ஷூட்டிங் வைத்தால் அஜித்தை பார்க்க ரசிகர்கள் வந்தால் பார்க்காமல் தவிர்க்க முடியாது. அப்படி அவர்களுக்கு நேரம் ஒதுக்கினால் படப்பிடிப்பு தாமதமாகும். நம்மால் தயாரிப்பாளருக்கு எதற்கு வீண் செலவு என்று அஜித் சொன்னதால் மதுரைக்கு போகவில்லை’’ என்கிறார்கள். ஆக மொத்தத்தில் மதுரை ரசிகர்களை ஏமாற்றி விட்டார் அஜித்!