முதல்முறையாக வெங்கட்பிரபு - சிம்பு கூட்டணி சேர்ந்திருக்கும் படம் - அரசியல் பின்னணியில் சிம்பு நடிக்கும் முதல் படம் என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட மாநாடு படம், இப்போது ஆரம்பிக்கும், அப்போது ஆரம்பிக்கும் என அவ்வப்போது தகவல்கள் மட்டும் வெளியாகி வந்தது. தொடர்ந்து படம் தள்ளிப்போவதற்கு, சிம்புதான் காரணம் என்றும் கூறப்பட்டது. 

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கடந்த ஆகஸ்ட் மாதம் மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 


எப்படியும் சிம்பு வந்துவிடுவார் என காத்துக்கொண்டிருந்த இயக்குநர் வெங்கட்பிரபுவும், சிம்புவின் நடவடிக்கையால் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்த தன்னுடைய ஒரு வருட உழைப்பு, எதிர்பார்ப்பு எல்லாமே வீணாகிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்திருந்தார். 

இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான மகனை காப்பாற்றுவதற்காக அப்பா டி.ராஜேந்தர், ரூ.125 கோடி பட்ஜெட்டில் சிம்பு நடிப்பில் மாநாடுக்கு போட்டியாக மகா மாநாடு  என்ற தலைப்புடன் புதிய படத்தை அறிவித்தார். 
இதன்பின் காலங்கள் ஓட சுரேஷ் காமாட்சி - சிம்பு இடையே சமரசம் ஏற்பட்டு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அத்துடன், சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வந்து ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் உத்தரவாதம் அளித்ததால் மாநாடு படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் ராகவா லாரன்சுடன் கூட்டணி சேர ரெடியாகிவிட்டார். 

இதனை உறுதி செய்யும் விதமாக, ராகவா லாரன்ஸ் உடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, “கடவுள் அன்பானவர், நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம். நல்லதே நடக்கும். எனவே இது நடைபெற்றுள்ளது. லாரன்ஸ் பிரதருக்கு நன்றி. விரைவில் அப்டேட் வரும்” என்று கூறியுள்ளார். 

https://twitter.com/vp_offl/status/1202116206565548033
‘முனி’, ‘காஞ்சனா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை நடித்து இயக்கிய நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது முன்னணி இயக்குநரின் படத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நமக்கு கிடைத்த தகவலின்படி, வெங்கட் பிரபு கூறிய கதையின் ஒன்லைன் பிடித்து போகவே லாரன்சும் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுவிட்டதாகவும், தற்போது, ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. விரைவில், வெங்கட் பிரபு - ராகவா லாரன்ஸ் கூட்டணியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் ஒன்றை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல், சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை நடத்தவும் தயாராக உள்ளாராம். ஒருவேளை, மாநாடு மேலும் தாமதமானால் அந்த கேப்பில் ராகவா லாரன்சின் புதிய படத்தை இயக்க வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.