மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். 

பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 25-ந் தேதி வெளியான இப்படம் தற்போது தமிழகமெங்கும் வசூல் வேட்டை ஆடி வருகிறது. கடந்த 4 நாட்களில் இப்படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மாநாடு படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். 

நடிகர் ரஜினிகாந்த், வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்பட படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார். அதேபோல் சிவகார்த்திகேயன், அனிருத், ஹரிஷ் கல்யாண், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்களும் மாநாடு படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில், மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்பட அனைவரும் நன்றி.... நன்றி என உற்சாகம் ததும்ப கத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…